மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு புணாணை சின்ன குளம், மாங்கேணி வட்டகல்குளம், பால்சேனை பனிச்சையடிகுளம், கதிரவெளி கரையாண்டவெளி என்பன உடைப்பெடுத்தமை காரணமாகவே வாகரைப் பிரதேசத்தில் சில பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
பொலநறுவையில் உள்ள பாரிய குளங்கள் திறக்கப்பட்டதன் காரணமாக வாகரை பிரதேசத்தின் 16 கிராமசேவகர் பிரிவிலுள்ள கிராமங்களில் தாழ் நிலங்களில் வாழும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
வாகரை பிரதேசத்தில் எட்டு முகாம்களில் 708 குடும்பங்களைச் சேர்ந்த 2400 குடும்ப அங்கத்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் சுப்பிரமணியம் கரன் தெரிவித்தார்.
இவர்களுக்குரிய சமைத்த உணவு வழங்கல் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பாக பிரதேசத்தின் கிராம சேவகர்களின் மேற்பார்வையின் கீழ் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் கிராமிய மட்ட முன் ஆயத்தக் குழுவால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அம்பந்தனாவெளி, ஆண்டான்குளம், கட்டுமுறிவு, ஊரியன்கட்டு. தட்டுமுனை, மாங்கேணி, காயான்கேணி, கண்டலடி ஆகிய கிராம சேவகர் பிரிவில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
காயான்கேணி கிராம மக்கள் காயான்கேணி சுனாமி கட்டடத் தொகுதியில் 18 குடும்பங்களில் 46 நபர்களும், மாங்கேணி மத்தி கிராம மக்கள் கொக்குவில் கிராம அபி;விருத்திச் சங்க கட்டடத்தில் 36 குடும்பங்களில் 119 நபர்களும், மாவடியோடை தேவாலயத்தில் 21 குடும்பங்களில் 67 நபர்களும், ஊரியன்கட்டு கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மாணிக்க விநாயகர் வித்தியாலயத்தில் 162 குடும்பங்களில் 544 நபர்களும், தட்டுமுனை பாலர் பாடசாலையில் 128 குடும்பங்களில் 425 நபர்களும், தட்டுமுனை பாடசாலையில் 146 குடும்பங்களில் 489 நபர்களும், அம்பந்தனாவெளி கிராம மக்கள் வம்மிவட்டவான் பாடசாலையிலும் 123 குடும்பங்களில் 457 நபர்களும், கண்டலடி கிராம மக்கள் கண்டலடி அருந்ததி வித்தியாலயத்தில் 72 குடும்பங்களில் 253 நபர்களும் தங்க வைக்கப்பட்டு;ள்ளனர்.
ஆண்டான்குளம் பெருக்கெடுத்தினால் கட்டுமுறிவு, ஆண்டான் குளம், தோணிதாண்டமடு ஆகிய கிராமங்களுக்கான போக்குவரத்து கதிரவெளி வரை துண்டிக்கப்பட்டுள்ளது.
புணானை கிழக்கில் மேவாண்ட குளம் பெருக்கெடுத்தன் காரணமாக 23 குடும்பங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்படடுள்ளது. மதுரங்கேணிக்குளம் உடைப்பெடுக்கும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.