மட்டக்களப்பு மாநகரசபை முதல்வருடன் சிங்கப்பூர் பிரதி உயர்ஸ்தானிகர் திண்மக்கழிவகற்றல் சவால்கள் தொடர்பான சந்திப்பு.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் அழைப்பின் பெயரில் சிங்கப்பூர் பிரதி உயர்ஸ்தானிகர் அமீர் அஜ்வாத் அவர்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

கழிவகற்றல் விடயங்களில் மட்டக்களப்பு மாநகரசபை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும், அவை தொடர்பில் சிங்கப்பூர் அரசின் அனுகுமுறைகள் பற்றியும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் மட்டக்களப்பு மாநகரசபையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவரும் மக்களின் சிரமங்களைக் குறைத்தும்,துரித மற்றும் இலகுவான சேவைகளை வழங்கும் நோக்கில் சிங்கப்பூர் தகவல் தொழிநுட்பம் சார் நிறுவனங்களின் உதவிகளைப் எதிர்காலத்தில் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும்,திட்ட மொழிவுகள் இதன்போது பரிமாறப்பட்டன.
அதுமட்டுமன்றி மட்டக்களப்பு மாநகரின் அழகுபடுத்தல், மற்றும் துரித அபிவிருத்தித் திட்டங்களில் முதலீட்டாளர்களை உள்ளீர்த்து கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மாநகர முதல்வரின் வேண்டுகோளிற்கு இணங்க சிங்கப்பூர் தேசிய நூலகக் குழுவினால் வழங்கப்பட்ட 3500 புத்தகங்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுக் கொண்டனர்.

சிங்கப்பூர் அரசின் நன்கொடையின் அடைப்படையில் பெற்றுக்கொள்ளப்படவுள்ள இப்புத்தகங்கள் அனைத்தும் மட்டக்களப்பு மாநகரசபையின் பராமரிப்பின் கீழ் இயங்கும் நூலகங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தினகரன் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.இக்கலந்துரையாடலில் பிரதிமுதல்வர் சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

Related posts