முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிறின்ஸ் காசிநாதர் தனது 97ஆவது வயதில் காலமானார்


மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,சிறந்த கல்விமானும்,மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பிரின்ஸ் காசிநாதர் புதன்கிழமை(12) மாலை 4.00 கல்விச்சமூகத்தையும்,கல்வியாளர்களையும் தவிக்கவிட்டு விடைபெற்றுச் சென்றுள்ளார்.

தனது 97வது வயதிலே தனது இல்லத்தில் காலமானார்.சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு பிறின்ஸ் காசிநாதர் காலமானார்.

இலங்கையில்  நிலவிய போராட்ட காலத்திலேதான்  இவர் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில்தான்  இலங்கை-இந்திய உடன்படிக்கை  கைச்சாதிட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.1989ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டுவரையும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்களுக்கு காத்திரமான சேவையாற்றியுள்ளார்.

நாட்டிலே யுத்தக்கெடுபிடிகள்,வன்முறைகள் உக்கிரமாக வெடித்த காலப்பகுதியில்தான் அமரர் பிறின்ஸ் காசிநாதர் ஒரு சமாதான புருஷராகவும்,சாரணராகவும் இருந்து இளைஞர்,யுவதிகளையும் யுத்தத்தின் அழிவில் இருந்து காப்பாற்றி இருக்கின்றார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகவும்.

ஈ.பி.ஆர்.எல்.எப்.(தமிழர் விடுதலைக் கூட்டணி)ஊடாக பாராளுமன்றம் சென்று  5வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.இவர் பாராளுமன்றம் சென்று மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள்,மக்களின் பிரச்சனைகளை மும்மொழியில் காரசாரமாக உரையாடி மட்டக்களப்பு மக்களின் துயர்துடைத்தவர்.

பேராசானுமாகவும்,அதிபராகவும் இருந்து மட்டக்களப்பின் கல்வி வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டுவந்துள்ளதுடன்; மட்டக்களப்பு மண்ணின் அடையாளமாக கருதப்படும் பாடுமீன் தொடர்பிலான பரந்த ஆய்வினை மேற்கொண்டு அதனை வெளி உலகுக்கு கொண்டுசென்ற பெருமையினையும் அமரர் பிறின்ஸ் காசிநாதர் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மீக நீண்ட காலமாக அதிபராகவும்,ஆசிரியராகவும் இருந்து கல்லூரி மாணவர்களுக்கு கல்வியையும்,ஒழுக்கத்தையும் மற்றும் பண்பாட்டையும்  உரமாக ஊட்டி பல கல்வியாளர்களையும்,புலமையாளர்களையும் உருவாக்கிய பெருமை இவருக்குண்டு.இவர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் அதிபராக இருந்த காலத்தில்தான் சிறப்பான ஒழுக்ககல்வி ஊட்டப்பட்டது என அவருடைய காலப்பகுதியில் படிப்பித்த ஆசிரியர்களும்,அவரிடம் படித்த மாணவர்களும் தெரிவிக்கின்றார்கள்.

இவரிடம் கல்வியைத் தொடர்ந்தவர்கள் இன்று சமூகத்தில்  அரசியல்வாதிகளாகவும், வைத்தியர்களாகவும்,பொறியியலாளர்களாகவும்,வழக்கறிஞர்களாகவும், ஆங்கில புலமையாளர்களாகவும்,இன்னும் பல உயர் அதிகாரிகளாகவும்,திகழ்கின்றார்கள்.இனம்,மதம்,மொழி கடந்து நாட்டிலே கல்விப்பணி,அரசியல்பணி போன்றவற்றை முன்னெடுத்தவர்.இன்றைய அரசியல்வாதிகளின் மத்தியில் முன்னுதாரணமாக அமர் பிறின்ஸ் காசிநாதர் திகழ்கின்றார்.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் நீண்டகாலம் சேவையாற்றிய முன்னாள் அதிபர் பிறின்ஸ் காசிநாதர் அங்கு இடம்பெறும் அத்தனை நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தனது பலத்தையும்,அடையாளத்தையும்  நிரூபித்து காட்டுபவர்.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு அண்மையில் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை தந்திருந்தார்.இதன்போது பாடசாலைரீதியாக பங்கேற்று ஜனாதிபதியுடன் பாடசாலையின் தேவைகள்,குறைபாடுகளை புடம்போட்டுக் காட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

அன்னாரின் இழப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பேரிழப்பாகவே அமைந்துள்ளது என மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர்,பாடசாலை சமூகம்,முன்னாள் அதிபர்கள்,பழைய மாணவர்கள்,மற்றும் மட்டக்களப்பு மண்ணின் புத்திஜீவிகள்,அரசியல்வாதிகள்,கவலை தெரிவிக்கின்றார்கள்.

Related posts