மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேசசபையின் வரவு – செலவுத்திட்டம் சபையின் தவிசாளருக்குள்ள அதிகாரத்தினைக்கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டாவது தடவையாகவும் மண்முனைப்பற்று பிரதேசசபைக்கான வரவுசெலவுத்திட்டம் மக்கள் சபையினால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தவிசாளர் தன்னகத்தே கொண்டுள்ள சட்டத்தின் அடிப்படையில் குறித்த வரவு செலவுத்திட்டத்தினை நிறைவேற்றியுள்ளார்.
மண்முனைப்பற்று பிரதேசசபைக்கான வரவுசெலவுத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான இரண்டாவது விசேட அமர்வு 24.12.2018 (திங்கட்கிழமை) காலை பிரதேசசபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் ஆரம்பமானது. சபையில் இரண்டாவது தடவையாகவும் வரவு-செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்த தவிசாளர் கடந்த அமர்வில் கோரப்பட்டதற்கு இணங்க உறுப்பினர்களினால் வழங்கப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மக்களின் தேவைப்பாடு அவர்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தினைக்கொண்டு கட்சிபேதங்களை மறந்து அனைவரும் இதற்கு ஆதரவு வழங்கவேண்டும் என தவிசாளர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் குறித்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவாக கருத்துகளை முன்வைத்த நிலையில் தமது கோரிக்கைகளை தவிசாளர் தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதன் காரணமாக இந்த வரவு-செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லையென ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட நிலையில் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 07 வாக்குகளும் எதிராக 09வாக்குகளும் செலுத்தப்பட்டன. ஒருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
அதனைத்தொடர்ந்து சபையினால் இரண்டு தடவைகள் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக தவிசாளரின் தற்துணிவு அதிகாரத்தின் அடிப்படையில் வரவு-செலவுத்திட்டத்தினை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தன் அடிப்படையில் வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.