‘உத்தரவாதங்களை நிறைவேற்றியிருந்தால் த.தே.கூ, ஆதரவு வழங்கியிருக்கும்’


த னது ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களை, மஹிந்த ராஜபக்‌ஷ நிறைவேற்றியிருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவருக்கு ஆதரவு வழங்கியிருக்குமென, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.  

கம்பெரலிய திட்டத்தின் கீழ், ஸ்ரீநேசன் எம்.பியினால் முன்மொழியப்பட்ட மட்டக்களப்பு – ஐயங்கேணி பாடசாலை வீதிக்குக் கொங்கிறீட் இடும் பணி, 23 ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தமக்குப் பல வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, யுத்தத்தில் வெற்றி பெற்றதும் எல்லாவற்றையும் வென்றுவிட்டோம் என்ற இறுமாப்போடு நடந்துகொண்டதன் காரணமாக, மஹிந்த ராஜபக்‌ஷவை நம்பமுடியாத சூழல் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.  

அது மாத்திரமின்றி, சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றாமல், ஜனநாயக ரீதியில் ஆட்சியை மஹிந்த கைப்பற்றியிருந்தாலும், தமது ஆதரவை அவருக்கு வழங்கியிருப்போமென்றும் அவர் தெரிவித்தார்.  

அத்துடன், எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கு, அரசாங்கம் கூடுதலான முக்கியத்துவம் வழங்க வேண்டுமெனவும் இது தொடர்பாக, அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாகவும் நீண்ட காலமாக நிலைபெற்றுள்ள அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விதமாக, அரசியல் தீர்வுத் திட்டத்தை தாங்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொருத்தமான நீதியை வழங்குதல், அரசியல் கைதிகளின் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீளக் கையளித்தல், வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துள்ளதாகவும் அதில் தாம் வெற்றி காண்போம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், ஸ்ரீநேசன் எம்.பி மேலும் தெரிவித்தார்.    

Related posts