ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா அவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீது கொண்ட கோபத்தை பழிதீர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் அமைந்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
கிழக்குமகாண ஆளுநராக ஹிஸ்புல்லா அவர்களை ஜனாதிபதி நியமித்தமை தொடர்பாக ஊடகவியலாளரிடம் இன்று(5) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:-
ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு அதை பிரதமரோ, அமைச்சர்களோ நியமிப்பதில்லை. தற்போது கிழக்குமாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெற ஏறக்குறைய ஒருவருடங்கள் மட்டுமே உள்ளது. அதற்கிடையில் ஆளுநர்கள் மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை ஆனால் ஜனாதிபதி அவர்கள் தமது விருப்பத்துக்கு அமைவாக அதை செய்துள்ளார்.அதில் கிழக்கு மகாணத்தின் ஆளுநராக ஏற்கனவே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்த ஹிஷ்புல்லா அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வேண்டுமென்றே இராஜானாமா செய்து அவருக்கு பதவி வழங்கி இருப்பது தமிழ்தேசிய கூட்டமைப்பு மீது கொண்ட ஆத்திரத்தை ஜனாதிபதி இதன்மூலம் சாதித்து விட்டார் என்பதே உண்மை.
கிழக்கு மகாண ஆளுநராக இதுவரை ஒரு தமிழ்பேசும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த எவருமே நியமிக்கவில்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்திருந்தால் அவர் 2015இம் ஆண்டு தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றபோது அவருக்கு அந்த நல்ல எண்ணம் ஏன் வரவில்லை.நல்லாட்சி என்ற பெயரில் கடந்த 2018, அக்டோபர் 25,வரை இடம்பெற்ற ஆட்சியில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒரு முஷ்லிம் ஆளுநர் ஒருவரை நியமிக்க மனம் வராத ஜனாதிபதிக்கு தற்போது அந்த எண்ணம் வந்தையிட்டு பலத்த சந்தேகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த 52நாட்களில் இடம்பெற்ற ஜனாதிபதி அவர்களின் தன்னிச்சையான பிரதமர் மைத்திரி நியமனம் நாடாளுமன்றத்தை சட்டத்துக்கு முரணாக கலைத்தமை.அது தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட சட்டரீதியான செயல்பாடு மூலமாக மீண்டும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டமை,மீண்டும் பிரதமராக ரணிலை தெரிவுசெய்ய தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியமை,என்பதெல்லாம் ஜனாதிபதி மைத்திரி அவர்களுக்கு எரிச்சல் ஊட்டும் சம்பவங்களான அமைந்திருக்கலாம்.அதற்காக எஞ்சிய ஒருவருடமாவது அதற்காக பழிதீர்ககும் படலமாக கிழக்கு மகாண ஆளுநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என எண்ணத்தோன்றுகிறது.
தற்போது நியமனம் பெற்ற ஹிஷ்புல்லா அவர்கள் மீது தமிழ்மக்கள் அச்சம் கொள்ள காரணம் அவரின் கடந்த கால செயற்பாடுகளில் சில தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தோற்று வித்தன.குறிப்பாக ஒட்டமாவடியில் இந்து ஆலயத்தை அகற்றி அதில் கடைகளை அமைத்தது, அதற்காக ஒரு நீதிபதியை தாமே இடம் மாற்றியதாக பகிரங்கமாக இனவாத கருத்தை கூறியிருந்தார். கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்ற கருத்தையும் ஒருதடவை கூறியிருந்தார்.
அதைவிட மட்டக்களப்பு மாவட்டம் புல்லுமலையில் போத்தல்களில் குடிநீர் நிரப்பு தொழில்சாலை அமைப்பதற்காக அப்பகுதி மக்களின் சம்மதம் இன்றி நிறுவுவதற்கான முயற்சி மேற்கொண்ட விடயங்களும் காணிகள் கொள்வனவு தொடர்பாக சில அதிருப்திகளும் பரவலாக அவர்மீது தமிழ்மக்களின் பார்வை உண்டு. இந்த விடயங்கள் தொடருமானால் எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் தற்போது உள்ள ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படுமோ என்ற சந்தேகம் தமிழ்மக்கள் மத்தியில் உண்டு.
இந்த காரணங்களால் மட்டுமே ஆளுநர் நியமனம் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் பக்கசார்பாக செயல்படாத ஒருவரை கிழக்கு மகாண ஆளுநராக நியமித்து இருக்கலாம்
என்ற கருத்து கிழக்கு மகாண தமிழர்கள்மத்தியில் உண்டு.
மேல்மாகாண ஆளுநராக நியமித்த அசாத்ஷாலி அவர்களை கிழக்குமகாண ஆளுநராக நியமித்திருப்பின் ஓரளவு அந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள கூடியதாய் இருந்திருக்கும்.
கடந்த 2015இம் ஆண்டு ஐனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக மைத்திரிபால ஶ்ரீசேனா அவர்களை தெரிவு செய்வதற்கு கிழக்குமகாண தமிழ்மக்களின் வாக்குகளும் கணிசமான அளவு பங்களிப்பு செய்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பும் முழுமையாக இருந்தது அப்படி இருக்கும் நிலையில் கிழக்கு மகாண தமிழ் மக்களின் மனங்களை புரிந்து கொள்ளாமல் அவர்களின் கருத்துக்களை அறியாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆலோசனை பெறாமல் கிழக்கு மகாண ஆளுநராக ஹிஷ்புல்லா அவர்களை ஜனாதிபதி நியமித்து அவரின் சுயநல அரசியல் செயல்பாடு என்பது தெளிவாக தெரிகிறது.
தற்போது ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஹிஷ்புல்லா அவர்களின் செயல்பாடு எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கு பாதகம் இல்லாமல் அரச நியமனங்களில் தமிழர்கள் புறக்கணிப்பு செய்யாமல், அபிவிருத்தி விடயங்களில் தமிழ் கிராமங்கள் பாதகம் ஏற்படாமலும்,பக்கசார்ப்பு இல்லாமலும் அமையுமாக இருந்தால் நல்லது எனவும் மேலும் கூறினார்.