அடிப்படை அறிவற்ற மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பான புரளிகள் கிளப்பிவிடப்பட்டுள்ளதாகவும்,புரளிகளை மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் நம்பக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளார்.
தன்மீது அபாண்ட பொய்களை சுமத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு இன்று(14)கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்:-
கடந்த வருடத்தில் கோரப்பட்ட கம்பெரலிய வேலைத்திட்டத்திற்கான திட்டமுன்மொழிவுகள் கோரப்பட்டபோது முதன் முதலாக உரிய நேரத்திற்கு திட்டமுன்மொழிவுகளை சமர்ப்பித்தவன் நான். அதற்கமைய Gam/BattiD/05 எனும் இலக்கம் இடப்பட்ட 20.10.2018 திகதியிடப்பட்ட தங்களால் சமர்ப்பித்த திட்டங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனும் கடிதம் எனக்கும் மாவட்ட செயலகத்திற்கும் அனுப்பப்பட்டிருந்தன.எனினும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் சில வேலைத்திட்டங்கள் தடைப்பட்டிருந்தன. இதனை நான் ஜனாதிபதியினுடைய கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன்.
மீண்டும் கம்பெரலிய வேலைத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் எனும் அறிவிப்பின் பின் என்னால் முன்மொழியப்பட்ட கம்பரெலிய வேலைத்திட்டங்களுக்குரிய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.மாவட்ட செயலகத்தினால் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் என்னால் முன்மொழியப்ட்ட திட்டங்களிற்கான மதிப்பீட்டறிக்கை தயாரி்ப்பதற்கான திட்டங்களின் பட்டியல் அடங்கிய MNPEA/PLN/BATTI-2018 எனும் இலக்கம் இடப்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.விரைவில் இவ் அனைத்துத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும்.
இதை அறியாத மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மட்டக்களப்பு மக்களை ஏமாற்றும் தமது வழமையான பாணியில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு தனது வங்குறோத்து அரசியலை வெளிப்படுத்தி வருகின்றார். எனது மக்களுக்காக நான் முன்மொழிந்த கம்பரெலிய திட்டங்கள் தொடர்பான தகவல்கள் தேவைப்படின் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும். மக்களை ஏமாற்றும் பாராளுமன்ற உறுப்பினர்தான் அவ்வாறான பொய்களை கூறுகின்றார் என்றால், அவருடன் சேர்ந்து சுத்தித்திரியும் சில நியாயமற்ற ஊடகவியலாளர்களும் செய்தி எழுத வேண்டும் என்பதற்காகவும்,தமது சுய இலாபத்திற்காகவும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுகின்றனர்.
நான் வெளிநாட்டுக்கு சென்றமையால் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்ட்ட நிதி திறைசேரிக்கு திரும்பிவிட்டதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது. எனது நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கவேண்டும் என்ற நோக்கில் தவறான செய்திகளை பரப்பி வரும் வங்குறோத்து அரசியல்வாதிகள் இவ்வாறான தவறான செய்திகளை பரப்புவதை இவ் மறுப்பறிக்கையுடன் நிறுத்திக்கொள்ளவேண்டும். முடிந்தால் இவ்விடயம் தொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொள்ளவும்.
அதுமாத்திரமல்ல கடந்த 2018 ம் ஆண்டு அதிகளவு நிதியொதுக்கீடுகளை பல அமைச்சுக்களுடன் பேசி மாவட்டத்திற்கு கொண்டு வந்தவன் நானே.கம்பரெலிய வேலைத்திட்டம் தவிர்த்து 210 மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் 2018 இல் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான தகவல்கள் தேவைப்படின் மாவட்ட செயலகத்துடனோ அல்லது நேரடியாக என்னுடன் பேசினால் சகல ஆவணங்களையும் தர நான் தயாராக உள்ளேன்.
மக்களின் அபிவிருத்திகளை ஏப்பம் விட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நடைபெற்ற அபிவிருத்திகள் போதுமானதாக இல்லை என்பதால் தான் கிழக்கு அபிவிருத்தியை கேட்டுப்பெற்றேன்.ஆனால் துரதிஸ்டவசமாக தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போனது.
இன்று முஸ்லிம் சமூகம் சார்ந்து ஊருக்கு ஒரு அமைச்சர், ஆளுநர் என்ற நிலை மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது.இப்போது சிலருக்கு பூரண சந்தோசம் என நினைக்கின்றேன். என பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.