வீடு புகுந்து பணம் மற்றும் நகை களைக் கொள்ளையடித்து சிறுமியை (வயது-17)பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை 6 நாள்களின் பின்னர் காங்கேசன்துறை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தெல்லிப்பழையைச் சேர்ந்த மகாதேவன் ரூபன் (வயது-28) ஏழாலையைச் சேர்ந்த இராஐகோபால் கிருஷ்ணகுமார் (வயது-30) ஆகியோர் உள்ளிட்ட 4 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாதேவன் ரூபன் மற்றும் இராஜகோபால் கிருஷ்ணகுமார் இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சந்தேகநபர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை தமது விசாரணைகளை முன்வைத்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
வலி. வடக்கு பிரதேச செயலர் பிரிவில் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை இரண்டு இடங்களில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.
பணம் மற்றும் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதன்போது வீட்டிலிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியிருந்தனர். மருத்துவ பரிசோதனைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
காங்கேசன்துறைப் பிராந்திய பொறுப்பதிகாரி உடுகமசூரியவின் பணிப்புரையின் கீழ் காங்கேசன்துறை உதவி பொலிஸ் அத்தியட்சர் சுசிலகுமார தலமையிலான பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர்இ காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து சந்தேகநபர்களைத் தேடி வந்தனர்.
இளவாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். கொள்ளைச் சம்பவத்துக்கு அவர் உடந்தை என்ற சந்தேகத்தில் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். வீடுகளை நோட்டம்விட்டு தகவல்களை அவரே வழங்குபவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாக கட்டுவனைச் சேர்ந்த மகாதேவன் ரூபன் என்ற இளைஞனை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரைக் கைது செய்வதற்குப் பொலிஸார் வீட்டுக்குச் சென்ற போது வீட்டு லெவல் சீற்றுக்குள் மறைந்து இருந்துள்ளார். அதன் பின்னர் ஏழாலையைச் சேர்ந்த இராஜகோபால் கிருஷ்ணகுமாரை வீட்டில் வைத்துக் கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து நவாலியில் பெண் ஒருவரிடம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியமை தொடர்பில் இவர்கள் இருவரிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மல்லாகம் பதில் நீதிவான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை சந்தேகநபர்கள் முற்படுத்தப்பட்டனர். அவர்களை இரண்டு நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிவான் அனுமதி வழங்கி இருந்த நிலையில் நாளை திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.