இங்கு முஸ்லீம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு அற்ற நிலை இருப்பதை நான் அவதானித்திருக்கின்றேன். அந்த நிலை தவறு. எமது அரசியல் நிலைமைகளையும் நாங்கள் புரிந்துணர்வுடன் அணுக வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது என வடமாகாண சபை முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று மாலை மட்டக்களப்பு அமெரிக்க மிசன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் அமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து மதங்களும் அன்பில் தான் தங்கியிருக்கின்றது. இந்த அன்பு என்பது தான் மக்கள் அனைவரையும் இணைத்து, ஒன்றித்து வைத்திருக்கின்றது. ஆனால் பல காரணங்களுக்காக அதனை நாங்கள் மறந்து விடுகின்றோம்.
நாங்கள் சகோதரத்துவத்துடன் வாழும் போது ஒருவரை ஒருவர் வெறுப்பதில்லை. எமது காரியங்கள், நாங்கள் செய்கின்ற விடயங்கள் வெறுப்புக்குள்ளாக்கக் கூடும். இச்சந்தர்ப்பத்தில் காரியத்தை, அந்த நடவடிக்கைகயை நாங்கள் கண்டிக்க வேண்டுமே தவிர மனிதனை தண்டிக்கத் தேவையில்லை என்பதே என்னுடைய கருத்து.
நாங்கள் எப்போதும் ஒரு மனிதன் செய்யும் நடவடிக்கையையும், அந்த மனிதனையும் ஒருமித்துச் சேர்த்துத் தான் பார்க்கின்றோம். அவர்கள் பிழையான வழிநடத்தலினால், பின்புலத்தினால் பிழையான நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்காக அவர்களை வெறுப்பதை விடுத்து அந்த நடவடிக்கையைச் சரிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த விதத்தில் நாங்கள் எமது பிரச்சனைகளை அணுக வேண்டி இருக்கின்றது.
எனது மட்டக்களப்பு விஜயத்தின் போது இங்கு எனக்கு பல விதமான பிரச்சனைகள் தெரிவிக்கப்பட்டது. இதன் போது சில விடயங்கள் எனக்கு தோன்றியது. இஸ்லாமிய மக்களின் பெருக்கம் நூற்றுக்கு ஐந்து வீதம், தமிழ் மக்களின் பெருக்கம் ஒன்று புள்ளி இரண்டு வீதம், சிங்கள மக்களின் பெருக்கம் ஒன்று புள்ளி எட்டு வீதமாக இருக்கின்றது இந்த அடிப்படையில் முஸ்லீம் மக்களின் பெருக்கம் இவ்வளவாக இருக்கும் போது எமது வருங்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது.
இந்த அச்சத்தின் நிமித்தம் முஸ்லீம் மக்களைத் தமிழ் மக்கள் ஓரளவுக்கு வெறுப்பதாகத் தெரிகின்றது. இது இவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. அது அவர்களின் மார்க்கத்திலே சொல்லப்பட்ட விடயமாக இருக்கின்றது. அக்காலத்திலே அவர்களின் சூழலின் காரணமாக நபிகள் நாயகத்தினால் பல்தாரமணம், விதைவைகள் மணம் என்பன சொல்லப்பட்டதாக இருக்கின்றது. இதனை ஒரு காரணமாக வைத்து முஸ்லீம் மக்களை வெறுக்க வேண்டியதில்லை.
வறுமையானது தமிழ் மக்களிடையே பரவியிருப்பதை நாங்கள் பார்க்கின்றோம். அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை நாங்கள் உயர்த்த வேண்டும். அதுதான் முக்கியமே தவிர முஸ்லீம் மக்களை வெறுப்பது வழியல்ல. வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தினால் எமது சமூகத்தின் பெருக்கத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். வறுமையின் நிமித்தம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்து செல்வதால் பெருக்கம் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவும் முடியாதுள்ளது.
இங்கு முஸ்லீம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு அற்ற நிலை இருப்பதை நான் அவதானித்திருக்கின்றேன். அந்த நிலை தவறு. நாங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட காரணத்தினால் எமக்குள் ஒரு ஒற்றுமையை வைத்திருக்க முடியும். ஒரு மொழியைப் பேசும் காரணத்தினால் நாங்கள் சகோதரர்கள் ஆகின்றோம். இஸ்லாம் சகோதரத்துவத்தைச் சொல்வது போன்று தமிழ் மொழியும் எங்களைச் சகோதரர்கள் ஆக்கி விட்டது. அந்த சகோதரத்துவத்தை நாங்கள் நிலை நிறுத்த வேண்டும். எனவே எமக்குள் இருக்கும் புரிந்துணர்வு அற்ற நிலையை இல்லாததாக்கி விட்டோமானால் எம்மால் முன்நோக்கிச் செல்ல முடியும்.
எமது அரசியல் நிலைமைகளையும் நாங்கள் புரிந்துணர்வுடன் அணுக வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது. தமிழ் மக்கள் தமிழர்கள் என்ற வகையிலே தமிழ் மொழியின் புராதனத்தை மனதில் வைத்து அதனை மையமாக வைத்து எங்களிடைய சிறந்த உறவு முறையை நாங்கள் ஏற்படுத்த வேண்டும். தமிழ் மொழி எங்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும் போது அந்த சகோதரத்துவத்தை நாங்கள் வலிறுத்தாமல் எங்களிடையே பலவிதமான முரண்பாடுகளை முன்நிறுத்திச் செல்வதால் தான் பல பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தவகையிலே எமது பிரச்சினைகளை முறையாக ஓரிடத்தில் இருந்து, நேரடியாகப் பேசி, அதனைத் தீர்க்கும் நிலையொன்று ஏற்படும் என்று தெரிவித்தார்.