இலங்கைத் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தில் (SLIATE), ஆங்கில உயர் டிப்ளோமாவை ( HNDE) பூர்த்தி செய்த அனைவரும் மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்காக விண்ணப்பிக்க முடியும் என மேல் மாகாண ஆளுநர் எம்.அசாத் சாலி அறிவித்துள்ளார்.
மேல் மாகாண பட்டதாரி ஆசிரிய பதவிவெற்றிடம் தொடர்பில் இலங்கை தொழில்நுட்பவியல் பட்டதாரிகள் 60பேருடன் இடம் பெற்ற சந்திப்பையடுத்தே ஆளுநர் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
மேல் மாகாணத்தில் நிலவும் ஆங்கில ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ. பீ. எம். அலவி , ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
ஊவா, சப்பிரகமுவ, வடமத்தி மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆசிரிய நியமனம் தொழில்நுட்பக் கல்லூரி பட்டதாரிகளுக்கு வழங்கப்படுகின்ற போதிலும் மேல் மாகாணத்தில் வழங்கப்படுவதில்லை என பட்டதாரிகள் குற்றம் சாட்டினர்.
அவர்களுடைய கோரிக்கையைக் கவனத்திற் கொண்ட ஆளுநர் மேல் மாகாணத்தில் நிலவுகின்ற அனைத்து பதவிவெற்றிடங்களும் மேல் மாகாணத்தில் வசிக்கும் விண்ணப்பதாரிகளால் மட்டுமே நிரப்பப்பட முடியும் எனவும், ஆசிரிய வெற்றிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் எனவும் உறுதியளித்தார்.