தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுத் ஏந்தி போரடிய தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினர் இல்லாத நிலையில் தமிழர் தாயகத்தில் மத மாற்றங்களும், நில ஆக்கிரமிப்புக்களும் தலைதூக்கியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிப்பதற்காக பாரிய சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அதனை உணர்ந்து தமிழ் மக்களும், பிரதிநிதிகளும் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அம்பாறை மத்திய முகாம் படர்கல் பத்தினியம்மன் ஆலய களஞ்சிய அறைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு ஆலயத்தலைவர் சா. மார்க்கண்டு தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், யுத்த காலத்தில் இருந்ததை விட தமிழர்களின் சனத்தொகை வளர்ச்சி வீதமும் வீழ்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைப்பதற்கு பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.