“அவசர கால நிலைமைகளில் வினைத்திறனும்,விளைதிறனும் கொண்ட உளசமூக ஆதரவை மாணவர்களுக்கு வழங்குவது எவ்வாறு? ” என்பது தொடர்பான முன்னோடி செயலமர்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் “அவசர கால நிலைமைகளில் வினைத்திறனும்,விளைதிறனும் கொண்ட உளசமூக ஆதரவை மாணவர்களுக்கு வழங்குவது எவ்வாறு? ” என்பது தொடர்பான முன்னோடி செயலமர்வு இடம்பெற்றது.

தற்கொலை குண்டுத்தாக்குதலில் நேரடியாகவும்,மற்றும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு உளசமூக ஆதரவை பொருத்தமான முறையில் எவ்வாறு பாடசாலை மட்டத்தில் வழங்கலாம் என்பது தொடர்பான செயலமர்வு வெள்ளிக்கிழமை(26) மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளநல பிரிவும்,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.பி.கோவிந்தராஜா தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்  பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான திருமதி சுஜாதா குலேந்திரகுமார்,வை.சி.சஜீவன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இருந்து அதிபர்கள், பகுதித்தலைவர்கள், வகுப்பாசிரியர்கள் மற்றும் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்கள் என 35 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட உளநல வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி கடம்பநாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் புஐணு நிறுவனத்தின் உளசமூக ஆதரவு வேலைத்திட்டத்தின் தேசிய மட்ட நிபுணத்துவ ஆலோசகர்களான ஆனந்த கலபதி,பெலிசியன் பிரான்சிஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு அவசரகால நிலைமைகளில் மாணவர்களை அணுகுவதற்கு உகந்த புதிய பல கருத்துக்களை வழங்கினர்.

பாடசாலை தவணை விடுமுறை நாட்களில் கடந்த 21 ந்திகதி ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் யேசு கிறீஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடி ஆராதனையில் ஈடுபட்டிருந்த மகிழ்ச்சியான தருணத்தில் சற்றும் எதிர்பாராத தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலர் உயிரிழந்து சரிந்து வீழ்ந்தனர். பலர் படுகாயமுற்று செய்வதறியாது திகைத்துப்போயினர்.இன்னும் சிலர் தப்பிப்பிழைத்துள்ளனர்.இதனால் எமது சமூகமே உளநெருக்கடிக்குள்ளாகியது. இழப்புணர்வு மனச்சோர்வு, நெருக்கீடு சக்தியிழந்த நிலை பயம் மற்றும் கோபம் என பல்வேறுபட்ட மனவெழுச்சித்தாக்கங்கள் ஒவ்வொரு தனிமனிதனிலும் உள்ள மீழும் திறனின் இயலுமைக்கேற்ப தாக்கம் செலுத்துகிறது.எமது மாணவர்களும் தத்தமது வயது பரம்பலுக்கேற்ப மனவெழுச்சி தாக்கதில் உள்ளனர்.இந்நிலையில் எதிர்வரும் 29 ந் திகதி திங்கட் கிழமை பாடசாலைகள் 2ம் தவணைக்காக மீள ஆரம்பிக்கப்படுகிறது. மாணவர்களுடனான பாடசாலை மட்ட வகுப்பறை மட்ட மற்றும் தனித்த முறையிலான அணுகுமுறையின் போது அதிபர்கள் ஆசிரியர்கள் எவ்வாறு செயற்படுதல், மாணவர்களுக்கு உள சுகத்தை கொடுக்கும் என விரிவான வழிகாட்டல்கள் இடம் பெற்றன.இதன்போது பாதுகாப்பான உணர்வை விருத்தி செய்து கொள்ளும் விதத்தில் செயற்படுதல்,தங்கள் உணர்வுகளை கையாளத்தக்க செயற்பாடுகளை அறிமுகப்படுத்தல்,வினைத்திறனுடனான தொடர்பாடலை விருத்திசெய்தலும் உறவை கட்டியெழுப்புதலும்,ஏனையவர்களுடன் சிறந்த புரிந்துணர்வை வலுப்பெற செய்யும் வகையில் செயற்படுதல்,நேர் கணிய நடத்தைகளை கொண்டு துலங்கச்செய்தல்,போன்ற பொதுவானதும் முக்கியமானதுமான விடயங்களை பிரயோக ரீதியாக பாடசாலைகளில் முன்னெடுக்கும் வகையில் செயற்பாடுகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி அதன் அவதானங்கள் பொருத்தமான முறையில் மீளாய்வு செய்யப்பட்டு சரியான  உளசமூக ஆதரவு செயற்பாட்டு முறைமை உருவாக்கப்படும் என கூறப்பட்டது.

?
?

Related posts