மாவட்ட உளநல ஆலோசனை சபை கூட்டமானது இன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. கடந்த மாதம் 21ம் திகதி ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளநல ஆலோசனை வழங்குவது சம்பந்தமாக ஆராயப்பட்டது.
இதில் மனநல வைத்திய நிபுணர் டாக்டர் கடம்பநாதன் பிராந்திய சுகாதார பணிமனை பிரதி பணிப்பாளர் டாக்டர்; அச்சுதன் மற்றும் உளநலப்பிரிவு வைத்திய நிபுணர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் கலந்கு கொண்டு கடந்த 21 ஆந் திகதி ஈஸ்ரர் தினத்தன்று ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற மக்களுக்கு உளநலம் சார்பாக எதிர் நோக்கும் பிரச்சனைகளை அவர்களின் குடும்ப பின்னணியோடு இணைந்த வகையில் உதவுதல் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதில் முக்கியமாக சுகாதார திணைக்களத்தின் உளநலவியலாளர்களின் உதவியுடன் செயலாற்றுவது தொடர்பாக ஆராயப்பட்டதோடு பாதிக்கப்பட்டவருக்கான உள சுகாதாரத்தினை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்பதும் இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
இன்;நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எ.எஸ்.எம் சியாட் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன்; டாக்டர். யூட் ரமேஸ் போன்றோரும் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
குறிப்பாக இக்கூட்டத்தில் மாவட்டத்தின் புதிய உளவள ஆலோசனைக்குழுவினை அமைத்து அதில் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள்; நிபுணர்கள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் சார்பான உத்தியோகத்தர்கள் ஆகியோரை இணைத்த வகையில் மாவட்டத்தில் இனி ஏற்படுகின்ற அனர்த்தங்களை எதிர்கொள்ளுகின்ற வகையில் இக்குழுவினர் செயற்படும் வகையில் அமைப்பதற்கு அரசாங்க அதிபரும் வைத்திய நிபுணர்களும் தீர்மானித்து அரசாங்க அதிபர் தலைமையில் இது விரைவில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.