அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 24 மணி நேரக் காலக்கெடுவை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் வழங்கியுள்ளார் .
ஜனாதிபதி இந்தக் காலகெடுவுக்குள் அவர்களைப் பதவிகளில் இருந்து நீக்காவிட்டால், முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்கப் போவதாகவும் அவர் எச்சரித்தார்.
கொழும்பு இராஜகிரியவில் உள்ள சதஹாம் செவன பெளத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவிகளில் இருந்து நீக்குமாறு சாசன பாதுகாப்புச் சபையின் செயலாளர்களான பெளத்த பிக்குமார் கையெழுத்திட்ட ஆவணத்தைக் கடந்த 22ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தோம்.
இது சம்பந்தமாக ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்காது போனால், எதிர்வரும் 30 ஆம் திகதி (நாளை) பிற்பகல் 2 மணிக்கு மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், படையினருடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தப் பகிரங்க கலந்துரையாடலில், கலந்துக்கொள்ளுமாறு இளைஞர், யுவதிகள், ஓய்வுபெற்ற இராணுவத்தினர், பயங்கரவாதத்துக்கு எதிரான சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்” – என்றார்