ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு இதுவரை தான் எந்த விண்ணப்பமும் முன்வைக்கவில்லை எனவும் கட்சியின் தலைமைத்துவத்துடன் தனது பெயர் பிரேரிக்கப்பட்டால் அது குறித்து ஆராயத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தனக்கு ஒருமித்து ஆதரவளிக்கும் பட்சத்தில் இதுகுறித்து தீர்மானிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்னர் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்திருந்த சபாநாயகர் கரு ஜெயசூரிய இக்கருத்தினை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் குறித்த கருத்தினை தெரிவித்திருப்பது, ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்குவது தொடர்பாக அவருக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றது.
மறுபுறத்தில், ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸா ஆகியோரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எதிர்பார்ப்போடு காய்களை நகர்த்தி வருகின்றனர். இது ஜனாதிபதி தேர்தலில் ஜக்கிய தேசியக் கட்சிக்குள் பலவீனமான நிலையை தோற்றுவிக்கும் வாய்ப்பை அதிகரிக்ககூடும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.