மைத்திரி , ரணில் இருவரும் அமைத்த ஆட்சியில் நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற அடிப்படையில் தமிழ் மக்களும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் தற்போதைய நிலைப்பாட்டில் அவை நடப்பதற்கான வாய்ப்புக்கள் நிச்சயமாக இல்லை என தமிழீழ விடுதலைக்கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
இன்றையதினம் வவுனியாவில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைக்கழகத்தின் பேராளர் மாநாட்டின் பின் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்,
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் கடந்த முப்பது ஆண்டு காலமாக குறிப்பாக பிரேமதாசா காலத்தில் இருந்து அது உபசெயலகமாக இயங்கினாலும் கூட அதனை தரமுயர்த்துவதற்கு பலவேறு தடைகள் போடப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. அங்கே இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தினருக்கு இந்த செயலகம் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. எனினும் அதனை ஒரு பிரச்சினையானதாக எண்ணி தடை செய்து கொண்டு இருக்கின்றார்கள். அத்துடன் தொடர்ந்து வந்த அரசுகளும் தற்போதைய அரசும் கூட நாங்கள் இவ்வளவு ஆதரவு கொடுத்தும் கூட அதனை செயற்படுத்துவதில் கால தாமதத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. இதற்காக இந்த விடயத்தில் போராடுகின்ற ஏனைய கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான பூரண ஆதரவை நாங்களும் வழங்குவோம். இதனை நாங்கள் ஒரு தீர்மானமாக எடுத்ததோடு வேறு பல தீர்மானங்களையும் இன்றைய பேராளர் மாநாட்டில் எடுத்துள்ளோம்.
இதேவேளை ஊடகவலியலாளர் ஒருவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த அரசாங்கத்துக்கு கூட்டிக்கொடுப்பதாக முன்னாள் முதலமைச்சர் தெரிவித்த கருத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள் என கேட்ட போது,
நாம் மைத்திரி பாலசிறிசேன ஆட்சிக்கு வருவதற்கும், ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதற்கும் ஒரு நியாயமான தீர்வு எமக்கு கிடைக்கும் என்ற அடிப்படையில் தமிழ் மக்களும் இரு பெரும் கட்சிகளும் அமைத்த அரசாங்கம் தீர்வை தரும் என்ற அடிப்படையிலே அதற்கான செயற்பாடுகளை எடுத்துக்கொண்டு இருந்தோம்.
ஆனால் தற்போதைய நிலைப்பாட்டில் அவை நடப்பதற்கான வாய்ப்பபுக்கள் நிச்சயமாக இல்லை. ஆனால் இதனை தற்போது சொல்லவில்லை ஆரம்பத்தில் இருந்து இதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவே சொல்லி வருகின்றேன். சிங்கள தலைமைகள் அதிகார பரவலாக்கத்துக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்றே நம்புகின்றேன். ஆகவே இது ஒரு பாரிய சிக்கலுக்குரிய விடயம். இருந்தாலும் இதற்கான அழுத்தங்கள் அனைத்தும் சர்வதேச அழுத்தத்தினால எடுக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்தின் மீது எடுக்கப்படுகின்ற சர்வதேச அழுத்தங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் போன்ற அழுத்தங்களின் காரணமாக இந்த அதிகார பரவலாக்கலுக்கான நடவடிக்கைகளுக்காக அரசியல் நிர்ணய சபைகள் உருவாக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கான முழுமையான ஒத்துழைப்பை நாம் கொடுத்து வருகின்றோம். அது மட்டுமன்றி மற்றைய விடயங்களுக்கும் எங்களால் முடிந்த வரை அழுத்தங்களை கொடுக்கின்றோம்.
அதேவேளை ஆதரவு மூலமாக கொடுக்கின்ற அழுத்தங்களையும் கொடுத்து வருகின்றறோம். ஆனால் அரசு இதனை சரியான முறையில் செய்து வரவில்லை.
இந்த வகையில் கூட்டிக்கொடுப்பது என்றால் என்னவென்றோ அல்லது யாரை கூட்டிக்கொடுக்கிறோம் என்றோ தெரியவில்லை. ஒரு அராங்கம் இருக்கின்றது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறரார்கள். ஆகவே நாம் இதனூடாக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். இது வழமையான செயற்பாடு. அதனைத்தான் நாம் செய்து கொண்டு இருக்கிறோம். அது எங்களுடைய கடமை இதனை வேண்டாம் என்று தவிர்த்து விட்டு இருக்க முடியாது.
கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடந்தியிருக்கிறோம், மற்றவர்கள் செய்கின்ற போராட்டத்திலும் எங்களுடைய பங்களிப்பு இருந்திருக்கின்றது. ஆகவே இவற்றுக்கு மத்தியில் நாம் ஒரு நியாயாமான தீர்வையும் பெற்றுக்கொள்ள வேண்டும் மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளுக்கான தீர்வையும் காண வேண்டும். இவ்வாறான விடயங்களில் நாம் எதனை காட்டிக்கொடுக்கின்றோம் என்பது விளங்கவில்லை எனத் தெரிவித்தார்.