இரா.சம்பந்தன் முதன்முறையாக தற்போதைய அரசாங்கத்தின் மீது மிகுந்த அவநம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். ஆயுத பலம் இல்லாத நிலையில் தமிழர்களை ஏமாற்றலாமென அரசு நினைக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாட்டில் இன்று (30) உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்கள் தன்னாட்சி உரிமையுடன் வாழ வேண்டுமென இந்த கட்சி தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டது. அவரது வழியில் நீண்டதூரம் பயணித்து விட்டோம். ஆனால் இன்னும் இலக்கை எட்டவில்லை.
உரிய நேரத்தில் உரிய காலத்தில சந்தர்ப்பங்கள் வரும்போது அதை நாம் பயன்படுத்தா விட்டால், விளைவுகள் பாரதூரமானதாக இருக்கலாம்.
13ம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பிரேமதாசா, சந்திரிகா, மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அது உறுதிசெய்யப்படவில்லை. அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்படவில்லை. அது செய்யப்பட வேண்டும்.
இந்த நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்ட பின்னர், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதிலும் கணிசமான முன்னேற்றங்களை கண்டு, அதுவும் தற்போது மந்தகதியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அது தற்போது பயணம் செய்வதாக நமக்கு தெரியவில்லை. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது, ஆட்சிததலைவர்கள் தாங்கள் விரும்புகின்ற சில கருமங்களை நிறைவேற்ற அரசியல் தீர்வு, அதிகார பரவலாக்கலை தாமதப்படுத்துகிறார்கள் என.
கிழக்கிலும் தற்போது வடக்கிலும் குடியேற்றங்கள் நடந்து வருகிறது. அங்குள்ள சனப்பரம்பலை மாற்றியமைக்கும் விதத்தில் பல்வேறு வழிகளில் குடியேற்றங்கள் நடக்கின்றன.
விடுதலைப்புலிகளின் காலத்தில் பிரேமதாசா, சந்திரிகா, மஹிந்த காலத்தில் இனப்பிரச்சனை தீர்வு பற்றி பல கருமங்கள் நடந்தன. ஆனால் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் அவையெல்லாம் கைவிடப்பட்டு விட்டன. இந்த நாடாளுமன்றம் ஒரு அரசியலமைப்பு சபையாக உருவாக்கப்பட்டு, உபகுழுக்கள் அமைக்கப்பட்டு, பல முயற்சிகள் நடந்தாலும், தற்போது எல்லாம் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் இருந்தால்தான், ஆயுத பலம் இருந்தால்தான் அரசியல் தீர்வு பற்றி ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வீர்கள், அந்தப்பலம் இல்லாவிட்டால் அதைப்பற்றி சிந்திக்காமல் விடலாமென நீங்கள் நினைக்கிறீர்களோ என சிந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அப்படி நினைத்தால் அது தவறு. அதையும் நாங்கள் விரைவில் பரிசீலிப்போம்.
யுத்தம் நடந்தபோது இனப்பிரச்சனை தீர்வு சம்பந்தமாக இந்தியாவிற்கு, அமெரிக்காவிற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பல வாக்குறுதிகள் வழங்கினீர்கள். அந்த வாக்குறுதிகளின் பிரகாரம்தான் தமிழீழ விடுதலைப்புலிகள், அந்த நாடுகளின் துணையுடன் அழிக்கப்பட்டார்கள். இன்று யுத்தம் முடிந்த பின்னர் உங்கள் வாக்குகள் காற்றில் பறக்கின்றது.
புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடியது, எமது பிரச்சனை தீர்க்கப்படாமல் ஏமாற்றப்பட்டு வந்ததாலேயே. நாற்பது வருடங்கள் எமது இளைஞர்கள் ஆயுதம் எந்தவில்லை. சாத்வீக வழியலேயே போராடினோம். ஒப்பந்தங்கள் செய்தோம், ஒத்துழைப்பு வழங்கினோம். ஆனால் அதற்கு பதிலாக எம்மீது பலவந்தமாக பல விடயங்கள் நடந்தன. இதன் பின்னரே புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள்.
வடகிழக்கிலிருந்து படைகளை வெளியேற்ற புலிகள் பல தாக்குதல்கள் செய்தார்கள். அந்த சமயத்தில் நீங்கள் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி கொடுத்தீர்கள் அவர்களின் உதவியை பெற. இவர்களை அழிக்க வேண்டும், இவர்களை அழித்தால்தான் அரசியல் தீர்வு ஏற்படுமென. இப்பொழுது அந்த வாக்குறுதிகளை மறந்து விட்டீர்கள். மறக்க நினைக்கிறீர்கள். அதை நாம் அனுமதிக்க மாட்டோம்.
எதிர்வரும் மாதங்களில் இந்த கருமங்களை நிறைவேற்றக்கூடியவகையில் திட்டமிட்டு செயற்பட வேண்டும் என்றார்.