தொழில்முறைக் கல்விக்கு இலங்கையில் பல நிறுவனங்கள் இருந்தாலும் வடக்கு கிழக்கில் அவை தொடர்பில் கவனம் செலுத்துவது குறைவாகவே பிள்ளைகளின் துறைசார்ந்த அனுபவத்தினூடான கல்விக்கு பெற்றோர்கள் ஊக்கம் கொடுப்பதும் குறைவாகவே இருக்கின்றது என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஐ.வி.எல் தனியார் தொழிற்கல்வி நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐ.வி.எல் தனியார் தொழிற்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜுட் மற்றும் ரமேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, ருவன்ரேகா அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், பொலனறுவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமேத டீ சில்வா உட்பட கல்வி நிலையத்தின் பயிற்றுவிப்பாளர்கள், பயிலுனர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உரையாற்றிய மாநகர முதல்வர் மேலும் தெரிவிக்கையில்,
எமது பிரதேசத்தின் கல்வி நிலை மற்றும் மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் பாரிய கேள்விக்குறியில் இருக்கின்றது. சாதாரண தரம் மற்றும் உயர்தர பெறுபேறுகளில் பாரிய வீழ்ச்சி நிலை காணப்படுகின்றது. உயர்தரம் முடித்து பல்கலைக்கழக அனுமதி என்பது சுமார் பத்து வீதத்தினருக்கே கிடைக்கின்றது. எனவே இவ்வாறான நிலைமையில் மாணவர்கள் தொழிற்துறை சார் கல்வியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
தனியார் கல்வி முறை என்பது போட்டித் தன்மை கொண்டது. அதில் விருத்தி பெற வேண்டும். பொருளாதார அபிவிருத்தியில் பாரிய பங்களிப்புச் செலுத்துவனவாக சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகள் காணப்படுகின்றன. அவற்றினூடான கல்வி முறைகளை அணுக வேண்டும்.
தொழில்முறைக் கல்விக்கு இலங்கையில் பல நிறுவனங்கள் இருந்தாலும் வடக்கு கிழக்கில் அவை தொடர்பில் கவனம் செலுத்துவது குறைவாகவே காணப்படுகின்றது. தமிழ் மாணவர்களும் இதற்கான முக்கியத்துவத்தினை வழங்குவதில்லை. பெற்றோர்களும் இதற்கு ஊக்கம் அளிப்பதில்லை. பிள்ளைகளின் துறைசார்ந்த அனுபவத்தினூடான கல்விக்கு பெற்றோர்கள் ஊக்கம் கொடுப்பதும் குறைவாகவே இருக்கின்றது.
அரச தொழில்வாய்ப்பு என்பது சுமார் இருபது வீதத்திற்கும் குறைவானவர்களுக்கே கிடைக்கின்றது. அவ்வாறு இருக்கின்ற பட்சத்தில் மிகுதி இருப்பவர்கள் ஏதோவொரு விதத்தில் தனியார் துறைகளினூடாகவே தொழில் வாய்ப்புக்களைப் பெற வேண்டும். அந்த வகையில் துறைசார் அனுபவம் கொண்ட தொழில்முறைக் கல்வியே அவர்களுக்கு அவசியம்.
எமது சமூகத்தின் கல்வி நிலைமைகள் வரவர குறைந்து கொண்டே செல்கின்றது. எதிர்காலத்தில் பொருளாதார விருத்தி பெறும் உலகில் தொழில்கல்வி மூலமே விருத்தியினைப் பெற முடியும் என்று தெரிவித்தார்.