வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் மக்கள் சந்திப்புக்கள் பல்வேறு இடங்களில் நேற்று இடம்பெற்றது.
அந்த வகையில் மாங்கேணி பிரதேசத்தில் மாங்கேணி வாழ் மக்களுக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் மாங்கேணி பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கலைந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் முக்கிய பிரச்சினையாக காணப்பட்ட முஸ்லிம் மக்களால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர் காணிகளை மீட்பதற்கான சட்டபூர்வமாக நடவடிக்கைகளை இலவசமாக செய்து கொடுப்பதாக வாக்குறுதியளித்ததையடுத்து, அம்மக்களால் காணி சம்பந்தமான ஆவணங்கள் கட்சியின் தலைவரான கயேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அத்தோடு கதிரவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் சட்டவிரோத இல்மனைட் மணல் அகழ்வு சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டு அதனை சட்ட ரீதியாக தடுப்பதற்கு கதிரவெளி வாழ் மக்கள் அதற்குரிய ஆதாரங்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கையளித்தனர்.
கதிரவெளி பிரதேசத்தில் வாகரை வாழ் மக்களின் விருப்பத்திற்கு எதிராக அவர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் விதமாக அமைக்கப்படும் தாதுமணல் (இல்மனைற்) தொழிற்சாலையை தடுத்து நிறுத்துவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்வதாக மக்களிடம் வாக்குறுதியளித்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மட்டு மாவட்ட இணைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கு.குணசேகரம் மற்றும் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்