இலங்கையில் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை தடைப்படும் அறிகுறி

இலங்கையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு கையிருப்பு குறைவடைந்துள்ளது. கடவுச்சீட்டு விநியோகிக்கும் நிறுவனம் இதனை கடந்த வருடமே அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது. அதற்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் புதிய தொகை பெற்றுக்கொள்வதற்காக கடந்த வருடம் நவம்பர் மாதம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

எனினும் அதற்கு நிதி அமைச்சு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக அமைச்சினால் 3 செயலாளர்களை கொண்ட குழுவொன்று நியமிக்க அமைச்சரவை தீர்மானித்தது.

இரண்டு வாரங்களுக்குள் பரிந்துரை வழங்குமாறு குறிப்பிட்டே இந்த குழு நியமிக்கப்பட்டது. எனினும் அந்த குழுவின் முதலாவது கூட்டம் நடைபெறவே ஒன்றரை மாதம் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பிரச்சினைக்கு இந்த தாமதமே முக்கிய காரணமாக உள்ளது.

எனினும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வேகமாக குறைவடைந்து வருகின்றமையினால் 10 லட்சம் புதிய கடவுச்சீட்டு பெற்று கொள்வதற்கு அமைச்சரவை இணை குழு தீர்மானித்துள்ளது. கடந்த 14ஆம் திகதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கடவுச்சீட்டு வழங்கும் நிறுவனத்திடம் அதற்கான கணக்கீடுகள் பெற்றுகொள்ளப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவை பத்திரம் நாளை கூடும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாளைய தினம் அதற்கு அனுமதி கிடைத்தாலும், இலங்கைக்கு கடவுச்சீட்டு கொண்டு வருவதற்கு 5 மாதங்கள் செல்லும் என தெரியவந்துள்ளது.

கடவுச்சீட்டுகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான கடித மூல செயற்பாட்டிற்கே ஒரு மாத காலம் செல்லும் எனவும் இலங்கையின் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை தடைப்படும் அறிகுறிகள் காணப்படுவதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts