கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு இயலாத தமிழ்தேசிய கூட்டமைப்பு எப்படி புரையோடிப்போன இனப்பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கப்போகுது

(க. விஜயரெத்தினம்)

 

வடகிழக்கு தமிழ்மக்கள் ஜனாதிபதி வேட்பாளர்  கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வாக்களித்து நாட்டின் அபிவிருத்தியில் இணைந்திருங்கள் என முன்னாள் பிரதியமைச்சரும்,தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாம்மான்)தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை அறிவித்துள்ளதையடுத்து அவரிடம் ஞாயிற்றுக்கிழமை(11)தொடர்பு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் …

நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்,தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ்மக்களை ஏமாற்றி விட்டது.தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ்மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிக்கொண்டு வருகின்றது.இன்னும் தமிழ்மக்கள் ஏமாறுவதற்கு தயாரில்லை.

கிழக்குத்தமிழர்களின் நிலம்,நிருவாகம்,நிதி,உள்ளிட்ட அனைத்து வளங்களும் நாளுக்கு நாள் சூறையாடப்படுகின்றது.தமிழ்மக்களின் அடிப்படைப்பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை.அரசியல்கைதிகளின் விடுதலை இன்னும் தீர்க்கப்படவில்லை.சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் எனும் எண்ணம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமோ அல்லது சம்பந்தனிடமோ ஒரு துளியளவும் இல்லை.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 12,000 போராளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.உண்மையாக சொல்லப்போனால் நாட்டுக்கு மட்டுமல்ல தமிழ்மக்களுக்கும் சிறப்பான தலைவர் மஹிந்த ராஜபக்ஷவேதான்.

இன்று வடகிழக்கு தமிழ்மக்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏமாற்றிவிட்டது.இன்னும் தமிழ்மக்கள் ஏமாற்றுவதற்கு தயாரில்லை.இன்று தமிழ்மக்கள் மத்தியிலும்,அவர்களின் மனதிலும் மாற்றம் ஒன்றுக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.அந்தமாற்றத்தின் முடிவினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்று அறிவித்திருந்தமையை தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.இன்று கிழக்கில் உள்ள தமிழ்மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார்கள்.அது இன்று கனிந்துள்ளது.தயவு செய்து முப்பது வருட யுத்தத்தினால் தமிழ்மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.தமிழர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டுமானால் கோத்தபாய ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த வேண்டும்.

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பதனால் கூட்டமைப்பின் குடும்பம்மட்டும்தான் அபிவிருத்தியையும்,வேலைவாய்ப்பு மற்றும் அரச சலுகையை அனுபவிக்கும்.தமிழ்மக்கள் சந்தோசமாக வாழவேண்டும் எனும் சிந்தனை அவர்களிடத்தில் இல்லை.தமிழ்தேசிய கூட்டமைப்பை ஐக்கிய தேசியக்கட்சி பகடக்காயாக வைத்து,மாற்றுச்சமூகத்தை வாழவைக்கின்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு இயலாத தமிழ்தேசிய கூட்டமைப்பு எப்படி புரையோடிப்போன இனப்பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கப்போகுது.தமிழ்தேசிய கூட்டமைப்பால் தமிழ்மக்களுக்கு ஒன்றும் பெற்றுக் கொடுக்க முடியாது.பாராளுமன்றத்தில் நிழல் பிரதமராக செயற்படும் சுமந்திரன் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும்படி ஏன் பிரதமரை கோரவில்லை.நக்குண்டார் நாவிழக்கார் என்பதுதான்.தங்களின் தேவையைப் பெற்றுள்ளார்கள்.கேட்க முடியாது.

எனவே தமிழ்மக்கள் மட்டுமல்ல சகோதர சிங்கள,முஸ்லிம் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைத்தான் விரும்புகின்றார்கள்.நாட்டில் இன,மத,பேதங்களை மறந்து நாட்டில் உள்ள அனைவரையும் நேசிக்கும் தலைவன் மஹிந்த ராஜபக்ஷவேதான்.தமிழ்தேசிய கூட்டமைப்பின் பின்னால் சென்றால் தமிழ்மக்களுக்கு எந்த விமோசனமும் கிடையாது.தமிழ்மக்கள் இன்னும் வறுமையாகத்தான் இருக்கனும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு விரும்புது.ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிள்ளைகள் நாட்டுக்காகவோ,தமிழ்மக்களுக்காகவோ தன்னுயிரை ஆகுதியாக்கி போராடி உயிரிழப்பை சந்தித்துள்ளார்களா? இல்லை.இன்னும் தமிழ்மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பின்னால் சென்றால் தமிழர்களின் இருப்பை காப்பாற்ற முடியாது.புத்திஜீவிகள்,படித்தவர்கள்,ஊடவியலாளர்கள் கிழக்கின் நிலைப்பாடை சற்றுச் சிந்தித்துப்பார்த்தால் புலப்படும்.

முதலில் தமிழ்மக்களின் பசியைப்போக்கனும்.அதற்குப்பின்னர்தான் அபிவிருத்தி உரிமை அரசியல்தேவை.வறுமைப்பட்ட தமிழ்மக்கள் பட்டியால் தவிக்கின்றது.கோத்தபாயவை வடகிழக்கு தமிழ்மக்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அவரையும் வருங்கால ஜனாதிபதி ஆக்குங்கள்.அப்போதுதான் தமிழ்மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் எனத் தெரிவித்தார்.

Related posts