விரக்தியின் விளிம்பில் தம்பிலுவிலில் ஓர் ஏழைக்குடும்பம்! பிரதேசசெயலர் தவிசாளர் நேரில் சென்று உதவ ஏற்பாடு!

வாழ்வில் பல சுமைகளைத் தாங்கியவாறு விரக்தியின் விளிம்பில் தம்பிலுவில் கிராமத்தில் ஓர் ஏழைக்குடும்பம் தவிக்கிறது.
 
தம்பிலுவில் மேற்கு 2ஆம் பிரிவில் வசிக்கும் சிந்தாத்துரை சாந்தா(58) கனகசிங்கம் நிரோசா(51) தம்பதியின் நிலைமையை  அண்மையில் திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் உதவிபிரதேசசெயலர் க.சதீஸ்கரன் சிரேஸ்டகிராமசேவை உத்தியோகத்தர் கண.இராஜரெத்தினத்துடன் சென்று அறிந்தார்.
 
மறுநாள் சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான  கி.ஜெயசிறில்  விஜயம் செய்து விபரங்களை கேட்டறிந்தார்.
 
வேறொருவரின் காணியில் தற்காலிகமாக குடிசை அமைத்து வாழ்ந்துவரும் அவர்களை சந்தித்தபோது திருமதி சாந்தா நிரோசா கண்ணீர் குளமாக கூறிய கருத்துகள் இவை.
 
எனது கணவர் மல்வத்தையைச்சேர்ந்தவர். நாம் திருமணமாகி 5பிள்ளைகள் உள்ளனர். அவர் ஊருக்குள் சென்று மாம்பழம் வாங்கி விற்றுவருபவர். அவரது அந்த உழைப்பினில்தான் எமது அறுவரின் வயிறும் கழுவப்படுகின்றது.
 
பிள்ளைகளில் மூத்தவர் சுசாந்தினி(30) திருமணமாகி சென்றுவிட்டார். மற்றயவர் கோகுலப்பிரியா(27) வாய்பேசமுடியாதவர்.வீட்டோடு இருக்கிறார். மற்றயவர் முரளிதரன்(25) குடும்பச்சுமை காரணமாக சவூதி சென்றவர்.5மாதங்களாகின்றன. கொரோனா காரணமாக தொழில் இல்லை. இன்னும் எதுவித தகவலுமில்லை. 
 
அடுத்தவர் பிரியதர்சினி(20) இளமையில் தலையில் ஏற்பட்டஅடி காரணமாக மறதிக்குணம். அவரும் வீட்டோடு.
அடுத்த மகள் சர்மிகா(15). இவர் மட்டும்தான்  தம்பிலுவில் மத்திய கல்லூரியில் தரம் 10இல் கற்கிறார். படிப்புச்செலவுக்கு காசில்லாமல் திண்டாடுகின்றார். என்றார்.
 
இதுஇவ்வாறிருக்க இவையெல்லாம் சொன்ன தாய்க்கு திவீரமான இதயவருத்தம். கிளினிக் கண்டி மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் சத்திரசிகிச்சை செய்யமுடியாது என கைவிரிக்கப்பட்டது. அதனால் கண்ணீரும் கம்பலையுடன் அவரது உயிர் பிள்ளைகளுக்காக ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
 
குடிசையின் கூரையும் பழுதடைந்துள்ளது. எக்கணமும் விழலாம் என்ற நிலையிலுள்ளது.
உதவும் பரோபகாரிகள் உதவமுடியும்.

Related posts