சைப்ரஸ் நாட்டின் வடக்கு கடற்பகுதியில் சுமார் 150 அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகு கவிழ்ந்ததில், 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
17 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 103 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக துருக்கி கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் காணாமல் போனோரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சைப்ரஸின் வடக்குப் பகுதியில் இருந்து சுமார் 30 கடல்மைல் தொலைவில் குறித்த படகு கவிழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் துருக்கியின் மெர்சின் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டவர், ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். எனினும், ஏனைய அகதிகள் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.
மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட வறுமை மற்றும் உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மில்லியன் கணக்கான அகதிகளும் புகலிடக் கோரிக்கையாளர்களும் ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்கின்றனர். ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்வதற்கு பிரதான நுழைவாயிலாக துருக்கியையே பயன்படுத்தி வந்தனர்.
இவ்வாறு துருக்கி ஊடாக கிரேக்க தீவுகளுக்குள் செல்ல முற்பட்ட போது ஆயிரக்கணககான அகதிகள் உயிரிழந்ததையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் துருக்கிக்கும் இடையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது. அகதிகளின் உள்நுழைவை குறைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதேவேளை, துருக்கி கடற்பரப்பினூடாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய முற்பட்ட அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளில், இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 26 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.