(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் 10ஆவது நாளாக தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் 10ஆவது நாளாக தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு – மிகவும் கஷ்ட நிலைக்குள்ளாகி உள்ள மக்கள். அத்தியவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துக் காணப்படுவதுடன், பொருட்களுக்கான தட்டுப்பாடும் நிலவிவருகின்றது.
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொது சந்தைத் தொகுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்காரணமாக, கடந்த வியாழக்கிழமை (26) முதல் இன்று (05) பத்தாவது நாளாகவும் அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவில் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்துவருவதனால், இப்பிரதேசங்கள் எங்கும் சனநடமாட்டமின்றி வீதிகள் விறைச்சோடி அமைதி நிலவி வருகின்றது.
இதேவேளை, தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட ‘புரவி’ சூறாவளி எச்சரிக்கை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச மக்களுக்கு முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதனால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிரதேசங்களிலுள்ள அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் மேலும் பல இன்னல்களுக்கு முகம்கொடுத்திருந்தனர்.
தாழமுக்கம் காரணமாக, கடந்த இரு தினங்களாக கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வந்ததுடன் அம்பாறை மாவட்டத்தில் சீரான காலநிலை நிலவி வருகின்றமை மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளன.
இதேவேளை, கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள் கடந்த 10 நாட்களாக தொழிலுக்குச் செல்ல முடியாததனால் வருமானமின்றி மிகவும் கஷ்ட நிலைக்குள்ளாகி உள்ளனர். இப்பிரதேசங்களில் அத்தியவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரித்துக் காணப்படுவதுடன், பொருட்களுக்கான தட்டுப்பாடும் நிலவிவருகின்றது.
இப்பரதேசங்களில் அரச திணைக்களங்கள், வங்கிகள், பாடசாலைகள் போன்றன மூடுப்பட்டுக் காணப்படுவதுடன், பொதுப் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே காணப்படுகின்றது.
இவ்வாறு குறித்த பிரதேசங்களில் தொழில் துறைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை உடன் வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கையினையும் மேற்கொள்ளமை குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இக்கொரோனா தொற்றுக் காரணமாக அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய சுகாதார அதிகாரி பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களின் தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனைகளை சுகாதார துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் கல்முனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் கொரோனா தொற்று அபாயம் தொடர்பில் பொலிஸார் ஒலிபெருக்கியில் அறிவித்தல் வழங்கி வருகின்றனர்.
பொது மக்கள் தேவையின்றி வெளியேறாமல் வீட்டில் இருக்குமாறும் கண்டிப்பாக முகக் கவசம் அணிவதுடன், கைகளையும் அடிக்கடி சவர்க்காரம் இட்டு சுத்தம் செய்துவதுடன் ஏனைய சுகாதார ஆலோசனைகளையும் கடைப்பிடிக்குமாறும் கல்முனை பிராந்திய சுகதாராப் சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்..