இலங்கை பூகோளத்தில் கடந்த மூன்று வருடங்களாக நல்லாட்சி என்றும் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்படும் என்றும் உலகையும் எம்மையும் ஏமாற்றிய அரசின் ஆட்சி முடிவுக்கு வந்திருக்கும் இந்த வேளையில் அடுத்த அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பே களத்தில் நிற்கின்றது. என தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நல்லாட்சி மூலம் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத் தருவதாக தமிழர்களை கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஏமாற்றி வரும் அரசு இன்று தலைகீழாக தொங்கும் நிலையில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஓர் அன்பான வேண்டுகோளை தாயகம் வாழ் தமிழர்கள் சார்பாக முன்வைக்கின்றோம்.
கடந்த 09 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழர் நலன் பேணும் விடயங்களில் கவனம் செலுத்தாத தங்களின் அரசியலிலும் பெரும் சரிவுகளை எதிர்நோக்கியுள்ளதையும் தாங்கள் உணர்வீர்கள் என நம்புகின்றோம்.
தொடர்ந்து தமது செயற்பாடுகளை தீர்க்கமாகவும் துணிவுடனும் முன்னெடுக்காத பட்சத்தில் தமது அரசியல் அஸ்தமிக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே தமிழ் மக்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் தரப்பிற்கு தமது ஆதரவினை வழங்க முன்வர வேண்டும் எனவும் கேட்டு நிற்கின்றோம். அவையாவன ……..
01. தமிழ் அரசியல் கைதிகளின் உடனடி விடுதலை.
02. வடகிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர தீர்வு.
03. தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு.
04. தமிழர் வணக்க நிகழ்வுகளை அனுஸ்டிப்பதற்கான அனுமதி.
போன்ற விடயங்களை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த உத்தரவாதமளிக்கும் தரப்பிற்கு குறுகிய கால அவகாசத்துடன் ஆதரவளிக்க முன்வருவதன் மூலம் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது கொண்டுள்ள அதிருப்தியினை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும்.
அதேவேளை மீண்டும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக திகழ முடியூம் என்பதனையும் கருத்தில் கொண்டு தமது முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்வதோடு தமது முடிவு எதுவாயினும் கல்விமான்கள் நலன் விரும்பிகள் ஆதரவாளர்கள் என தமிழர் தரப்பு பிரதிநிதிகளிடமும் கலந்தாலோசனை செய்வதன் மூலம் மிக வெற்றியளிக்கும் என்பது எமது கருத்து கடந்த காலங்களில் தமது தன்னிச்சையான முடிவுகளின் பிரதிபலிப்பே தமிழர்களாகிய நாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதற்கான காரணம்.
தற்போது விழிப்படைந்துள்ள தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் ஓர் அரசியல் மேலான்மையை செலுத்த தவறும் பட்சத்தில் தமது கட்சிக்கு ஆதரவளிக்கும் கணிசமான போராளிகள் அமைப்புக்களும் கட்சிகளும் தமது ஆதரவினை விலக்கிக் கொள்ள நேரிடும் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். என தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.