அதிகாரத்துக்கு எதிரான குரலைஆன்மீக விடுதலையுடன் நிதானமாக கலந்துஎந்த கருத்தியல் வன்முறையையும் பிரதிபலிக்காமலே எழுதியகவிஞர் அலறிவிமர்சகர் மன்சூர் ஏ காதர் தெரிவிப்பு

அதிகாரத்துக்கு எதிரான குரலை ஆன்மீக விடுதலையுடன் நிதானமாக கலந்து எந்த கருத்தியல் வன்முறையையும் பிரதிபலிக்காது கவிஞர் அலறி றிபாஸ் அவருடைய இலக்கை நோக்கி பயணிக்கின்றார் என்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வு நிலை பதிவாளரும், விமர்சகருமான மன்சூர் ஏ. காதர் தெரிவித்தார்.

 
அலறி றிபாஸ் எழுதிய தூள் அல்லது துகள் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
 
கடலின் அடி தளத்திலே கண்ணுக்கு புலனாகாமல் ஆழ இறுகி போய் பனி மலை கிடப்பது போல மருதமுனை மண்ணின் மூத்த கவிஞர் சின்னாலிமப்பாவின் செல்வாக்கு இம்மண்ணின் புலமைத்துவ சமூகத்தின் பொது உளவியலின் உள்ளே உறைந்த பனி மலையாக இறுகி கிடக்கின்றது. அப்பாரம்பரியம் அலறி மீது அவரை அறியாமலே தோன்றா துணையாக வெளிப்பட செய்கின்றது. இப்பின்னணியுடன் அலறியின் கவிதைகளுக்குள் நாம் செல்லலாம்.
 
துளி அல்லது துகள் என்கிற அலறியின் ஆல்பம் 32 கவிதைகளை கொண்டிருக்கின்றது. இதில் மாகடலும் விரிபாலையும் பெருங்காடும் ஐம்பூதங்களும் அண்டத்தின் துளி அல்லது துகள் என்கிற மகுட வாசகம் பின்னட்டையிலே இணைக்கப்பட்டு உள்ளது. இது இக்கவிதை தொகுதியின் மூன்றாவது கவிதையாக இணைக்கப்பட்டு உள்ள துளி அல்லது துகள் எனும் கவிதையின் இறுதி அடி ஆகும். 
 
மாகடல், விரிபாலை, பெருங்காடு, நெடுவான், ஐம்பூதங்கள், அண்டம் ஆகிய வார்த்தை பிரயோகங்கள் அறிவு துறையின் ஸ்தூல முடிச்சாகிய தத்துவ ஞானம் அல்லது மெய்யியல் என்ற துறைக்குள்ளே புகுந்து விளையாடுகின்ற தத்துவ சார்பும், வித்துவ செருக்கும் நிறைந்த சிவஞான சித்தர்களினதும் மட்டும் அன்றி நாம் இன்று வரை வியக்கின்ற இமாம் கஸ்ஸாலியினதும், மௌலானா றூமி போன்றோரினதும் அறிவியல் சதுரங்க விளையாட்டாகும். 
 
அத்தகைய அறிவு சார்பானதும், ஆன்மிகம் சார்பானதுமான தரிசனம் அலறிக்கும் கிடைத்திருப்பது வரமே ஆகும்.மேற்சொன்ன பத பிரயோகங்களில் இவரின் அறிவியல் வசீகரமானது. பின்னவீனத்துவ படைப்பிலக்கியங்களை வாசித்த முதிர்ச்சியுடன் புனைந்தமை அலறியை இன்றைய இளைய படைப்பாளிகளிடம் காணப்படுகின்ற விசேட பண்புகளின் உச்சத்துக்கு கொண்டு வந்து சேர்த்து இருக்கின்றது.
 
ஒட்டுமொத்தமாக இத்தொகுதியை வாசிக்கின்றபோது இயற்கை மீதான பெருங்காதல், எல்லாவற்றையும் ஓர் உடன்பாட்டு தன்மையுடன் கையாள தெரிந்த நம்பிக்கை வரட்சி இல்லாத ஆன்மீகம், ஓர் அணுப் பிரமாணமான கருவைத்தானும் கவிதைச் சிலையாக வடிக்கின்றபோது அவரை அதுவாகவே சம்பூரணமாக மாற்றி கொள்ளும் கூடு பாயும் இராஜதந்திரம், வாசகரை மனத்தளவில் உடன்பாட்டு தன்மையுடனும், எதிர்மறை தன்மையுடனும் அதிர்வு பண்ண வைக்கின்ற உளவியல் பொறிமுறை அறிந்ததும், வித்துவமான அறிவியல் இரட்டை முறை கொண்டதுமான சொல்லாட்சி, அதிகாரத்துக்கு எதிரான குரலை ஆன்மீக விடுதலையுடன் நிதானமாக கலந்து எந்த கருத்தியல் வன்முறையையும் பிரதிபலிக்காது அவருடைய இலக்கை நோக்கி நடை பயிலுதல், இப்படி இதனை சொல்லி இருக்கலாமே என்கிற வெப்புசார மன சிக்கலுக்குள் வாசகனை தள்ளுகின்ற இராஜதந்திரம் ஆகிய குணாம்சங்கள் இதில் வியாபித்து எழுவதை காண முடிகின்றது.
 
இவ்வாறான புதினமான பண்பு கூறுகளை இத்தொகுதி கொண்டு உள்ளது. இயற்கை மீதான பெருங்காதல் பண்பு மேலோங்கி இருப்பதனால்தான் காற்றின் பார்வையில் வௌவாலின் குருட்டு தனத்தையும், வண்ணாத்தி பூச்சியின் படபடப்பையும் ஒரு சேர உணர கவிஞரால் முடிந்திருக்கின்றது. சாம்பலும், செவலையுமான ஒரு பிணையல் மாட்டையும், அதன் வண்டிலையும் மணியோசை இழுத்து செல்வது இவரின் கண்களுக்கு மாத்திரமே தெரிகின்றது. பறவை அதன் இரு கால்களை நான்காக நீட்டியதும், இரு கண்களில் நிலவை ஊற்றியதும், கால்களில் காற்றை அள்ளி கொண்டும், தலையில் சூரியனை சுமந்து கொண்டும் போவதும் தெரிந்திருக்கின்றது. வெள்ளைக்காரியின் செதில் மணக்கும் மேனிக்கு கடலை ஆடையாக அணிவதும் கனகாம்பர பூவின் நிறத்தில் பிரிந்த வார்த்தைகள் கள்ளி செடியின் முட்களில் சிக்கி கொள்வதும் இவரின் பார்வைக்கு படுகின்றது.
 
கவிஞன் இயற்கை மீதான காதலை வெளிப்படுத்துவது ஒன்றும் புதிதல்லவே என்பது உண்மைதான். ஆனால் இவரை படிக்கின்றபோது சராசரி ஒப்பனைகளாக இல்லாது புத்தம் புதிய அதிர்வுகளை நிச்சயம் உங்கள் மீது திணிக்கவே செய்யும். இயற்கையில் முயங்கி போகும் கவிஞன் பெண்ணின் இலாவண்யத்தில் மயங்கி போகவில்லை என்பது தர்க்க போலியாகும். நமது கவிஞர் பெண்ணின் எழிலையும் அவள் தரும் இன்பத்தையும் முயங்கி போய் அணு அணுவாக பிரதிபலித்துள்ளார். தீயின் சுவாலை எறிந்தும், மகரந்த மணிகளை சொரிந்தும், இறுக பின்னிய போர்வைக்குள் இறகுகள் நீவி பறக்கின்ற தகதகக்கும் குலாவுகை, கும்மிருட்டு, குறுகுறுப்பு என அத்தீயில் முயங்கி போகின்றார் கவிஞர். அடர் இருளில் கண்கள் ஊர்வதை நாம் எத்தனை பேர் பார்த்திருக்கின்றோம்? இதழ்கள் இறுக்கத்தில் ஆகி ஊறிய நீர் உனதா எனதா என மயங்கி போகின்றார். அதே சம நேரத்தில் ஒருவர் தாகம் ஒருவர் தீர்க்க முற்றும் துறந்து சங்கமிப்பதையும் அற்புதமாக குறிப்பிடுகிறார்.
 
கவிஞன் என்பவன் மன சாட்சியின் குரல்  என்ற கருத்து இன்று வரை செயற்பாட்டில் உள்ள ஒரு வார்த்தை பிரயோகம் ஆகும். இன்னும் சற்று கூர்மையாக சொன்னால் இதுவே கவிதை ஆத்மாவின் குரல் எனலாம். தமிழ் இலக்கிய நெடுவானில் இது அக திணையில் மென்மையாகவும், புற திணையில் வன்மையாகவும் நடை பயின்று வந்திருக்கின்றது. கவிஞர்களில் சிலர் மெல்லினமாகவும், சிலர் வல்லினமாகவும் வெளிப்படுத்துவர். ஆனால் ஈழ விடுதலை போராட்டத்துக்கு பின்னர் இது வல்லினமான ஓர் அம்சமாகவே தமிழில் தோற்றம் பெற்று விட்டது. பாண்டியூரான் முதல் சேரன் உட்பட அனைவருமே இதில் அடங்குகின்றனர். சில இடங்களில் ஜெயபாலனை விலக்கி பார்க்கின்ற உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த ஆடுகளத்தில் மென்பந்து கிறிக்கெற் வீரராகவே அலறி வலம் வருகின்றார். அவர் வீழ்த்த்ச் இலக்குப்படுத்தும் ஒவ்வொரு விக்கெற்றும் அற சீற்றத்தின் எறிகணையாக அன்றி மன்மத அம்புகளின் நாணத்துடனேயே புறப்படுகின்றன. எரிப்பு, புதைப்பு வாதங்கள் ஆறடி நிலம், அஹிம்சை, புத்தன் போதனைகள், அர்த்தம் புரியாத மண் அகன்றிட துடிக்கின்றேன் என்று அதிகாரத்துடனான போராட்டத்தை அஹிம்சையோடும் ஒரு வகை தப்பி பிழைக்கும் உணர்வோடூம் எடுத்துரைக்கின்றார். அடி பெருத்த கிழட்டு மரங்கள் வான் கிழித்து நெடுக்கின்றன அதில் எப்போதும் முட்டுக்காய்கள் என்று அவரின் இயலாமையை நினைத்து வழக்காடுகின்றார். ஏப்ரல் 21 இன் மனோநிலையை உறைந்த தேவாலயங்களின் மாடங்கள் சிலுவைகள் மணிப்புறாக்கள் நொறுங்கி சிதறி மௌனித்தன என்கிறார். இவை அவரின் மென்மையான அற சீற்றத்தின் குறியீடுகள். ஆனால் அதில் வரும் மணிப்புறாக்கள் அந்த துன்பியல் நாடகத்தின் உச்சமான சோகத்தின் படிமங்கள். அத்தோடு இவ்வோராண்டு இடைவெளியில் இனங்களுக்கிடையில் நாலாயிரம் வன்மம் நாற்பதடி சுவர் என்று இந்த வரலாறு கடந்த பாரதூரத்தை கவிதையாக்கி இருக்கின்றார். பாரதியார் அக்கினி குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு என்று வன்முறையாக சொல்வதை அலறி மெல்லினமாக சொல்லாவிட்டாலும் இடையினமாக சொல்லி இருப்பது நோக்க தக்கது. பாறை அசைகிறது பாய்கிறது கல் பறக்கிறது பொறி பற்றி பொசுங்குகிறது  பற்றைக்காடு, பெருந்தீ என முடிக்கின்றார். அது உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் ஏற்படுத்துகின்ற அதிர்வு ஆயிரம் காலத்து இலக்கு தவறாத எறிகணையாக எம்மை காயப்படுத்தி கொண்டே இருக்கின்றது. 
 
ஆக நீண்ட நாட்களுக்கு பிறகு மென்மையும் பெண்மையும் நாணமும் இரண்டற கலக்க ஒரு பாத்திரத்தில் இருந்து இன்னோர் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றுவது போன்று எஸ். பி பாலசுப்பிரமணியத்தின் குரல் போல பிசிறின்மையும், ஆற்றொழுக்கும், நீர் வீழ்ச்சியின் கொள்ளை அழகும் நிரம்பிய ஒரு தொகுதியை வாசித்த அனுபவம் அனைவருக்குமே நேர்கின்றது என நான் கருதுகின்றேன். 

Related posts