அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்த ஒற்றுமையோ பலமோ இன்று இல்லை. தமிழ்த் தேசியப் பரப்பிலே இருக்கும் அனைத்து சக்திகளும் இன்று ஒற்றுமையாக நிற்க வேண்டும். அதனைத தான் மேற்குலகமும் விரும்புகின்றது. அதற்குத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மிக உறுதியாக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேசத்தில் வளைகுடா வானம்பாடிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இழந்த உயிர்களைத் தவிர மற்றையவைகளையெல்லாம் கல்வியின் மூலமாக மீளப் பெற்றிட முடியும் என்ற நம்பிக்கை எமது இனத்திற்கு இருக்கின்றது. ஏனெனில் ஒரு காலத்திலே இலங்கையிலே எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் தமிழர்கள் கோலோற்றிய நிலை இருந்தது. அந்த நிலை மீண்டும் வரவேண்டும்.
நாங்கள் இந்த நாட்டில் பேரினவாத சக்திகளுடன் இணைந்து வாழ முடியாது என்ற காரணத்திற்காக தமிழீழம் என்ற குறிக்கோளுடன் ஆயுதமேந்திப் போராடி இணைந்த வடகிழக்கில் ஒரு குறிப்பிட்ட காலம் வாழ்ந்தாலும் இன்று அந்த மாகாணங்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு மாகாணத்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கிழக்கு மகாணத்தை பேரினவாத சக்திகள் தங்களது முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மிகவும் உறுதியாக இரகசிய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
1921ம் அண்டு கணக்கெடுப்பின் பிரகாரம் கிழக்கு மாகாணத்திலே ஒருசில நூறு சிங்களவர்களே வாழ்ந்ததாக வரலாறு உண்டு. ஆனால் இன்று 24 வீதமாக அவர்கள் வாழுகின்றார்கள். கல்லோயாக் குடியேற்றம், கந்தளாய் குடியேற்றத்துடன உருவான சேருவில தொகுதி இந்த மாகாணத்தில் சிங்களவர்களின் அதிகரிப்பை உருவாக்கியிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலும் சேனைப்பயிர்ச் செய்கை, மரமுந்திரிகைச் செய்கை என்ற போர்வையில் எல்லைப் புறங்களில் குடியேற்றங்களைச் செய்து மட்டக்களப்பிலும் சிங்களப் பிரதிநிதித்துவம் ஒன்றைப் பெறுவதற்காகத் துடியாய்த் துடிக்கின்றார்கள்.
அதுமாத்திரமல்லாமல் கனிய வளம் என்ற பெயரில் எமது மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களில் பாரிய திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அம்பாறையிலே திருக்கோவில், திருகோணமலையிலே புல்மோட்டை, மட்டக்களப்பில் வாகரை போன்ற பிரதேசங்களில் எமது வளங்களைச் சுரண்டுவது மாத்திரமல்லாமல் இங்கு கடலரிப்பினால் இந்தப் பிரதேசங்கள் காணாமல் போனாலும் அக்கறையில்லை என்ற ரீதியில் செயற்படுகின்றார்கள்.
அம்பாறை மாவட்டம் பல வழிகளிலே பாதிக்கப்பட்;ட ஒரு மாவட்டம் போராட்டத்திற்கு அப்பால் சகோதர இனங்களினால் கூட அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம். 1989ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறைமையினால் ஒரே ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெறுமளவிற்கே நாங்கள் இங்கு வாழுகின்றோம். இருந்தாலும் இரண்டு தடவைகளில் அம்பாறை மாவட்டம் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தை இழந்திருக்கின்றது.
கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயத்தை மையமாக வைத்து 2020ம் ஆண்டு இந்த மாவட்டம் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழந்தது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் உறுப்பினரை பிரதிநிதித்துவம் இல்லாத அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கியிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் எக்காரணம் கொண்டும் மீண்டும் பிடுங்கப்பட அனுமதிக்க மாட்டோம். ஏனெனில் அம்பாறை மாவட்டம் பேரினவாத சக்திளால் மாத்திரமல்ல சகோதர இனங்களினால் தற்போதும் துன்புறுத்தலுக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றது.
இன்றுவரைக்கும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்குத் தடையாக இருப்பவர்கள் சகோதர இனத்தினரே. நாங்கள் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுடன் வாதிட்டும் இருக்கின்றோம். ஆனால் சகோதர பாராளுமன்ற உறுப்பினர் இதற்குத் தடையாக இருக்கின்றார்.
இப்படி இருக்கும் போது இவர்களுடன் எதிர்காலத்தில் நாங்கள் எவ்வாறு சேர்ந்து செயற்பட முடியும். எங்களுடைய தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனைச் சிந்திக்க வேண்டும். நாங்கள் அவர்களுடன் இணைந்து பயணிக்க முயற்சிக்கின்றோம். அது தவறான விடயம் என்பதை அவர்களின் செயற்பாடுகள் மூலமே அவர்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். இவற்றை நாங்கள் புரிந்து செயற்பட வேண்டும்.
தற்போது தமிழர்கள் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமல்ல வடக்கு கிழக்கிலே ஒற்றுமையாக இருக்க வேண்டிய காலகட்டத்திலே இருக்கின்றோம். ஏனெனில் நாங்கள் பல இழப்புகளைச் சந்தித்து அரசியல் ரீதியில் நடுச் சந்தியில் நிற்கின்றோம். ஆயுத ரீதியில் பல முரண்பாடுகள் எங்களுக்குள் இருந்தும் 2001லே அரசியல் ரீதியாகக் குரல் கொடுப்பதற்கு ஒரு சக்தி வேண்டும் என்பதற்கான ஒரு சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்த ஒற்றுமையோ பலமோ இன்று இல்லை. தமிழ்த் தேசியப் பரப்பிலே இருக்கும் அனைத்து சக்திகளும் இன்று ஒற்றுமையாக நிற்க வேண்டும். அதனைத தான் மேற்குலகமும் விரும்புகின்றது.
மேற்குலகும் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கின்றது. தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியற் தீர்வைக் கொடுக்கக் கோருகின்றது. கடந்த ஐநா பேரவையிலே பிரித்தானியாவால் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஐநா சபையிலே வாக்களிக்கக் கூடிய 47 நாடுகளில் 20 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இலங்கைக்கு ஆதரவாக 07 நாடுகளே வாக்களித்துள்ளன. இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகள் கொமினிசம் என்ற போர்வையிலே சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடுகளே. ஆனால் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளிலே ஜனநாயகம் இருக்கின்றது. அங்கு மொழி, இன ரீதியில் மாகாணங்கள் பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியா நடுநிலை வகித்துள்ளது. அதற்கு பல விமர்சனங்கள் இருந்தாலும், இந்தமுறை வளைகுடா நாடுகள் கூட நடுநிலை வகித்துள்ளன. இந்தியா நடுநிலை வகித்தமைக்கு அரசியற் காரணங்கள் பல இருந்தாலும் இந்தியா உறுதிபட ஒரு விடயத்தைக் கூறியிருக்கின்றது. 13வது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடாத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது.
அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு மாகாண ஆட்சி எங்களது கையில் இருக்குமானால் இந்த மாதிரியான நில அபகரிப்புகள், எல்லைப்புற குடியேற்றங்கள், இல்மனைட போன்ற எமது வளங்கள் சுரண்டப்படுகின்ற விடயங்களுக்கு நாங்களே முடிவு கட்ட முடியும். எங்களை நாங்களே ஆளுகின்ற ஒரு உள்ளகச் சுயநிர்ணய முறைமை உருவாகுமாக இருந்தால் இத்தகு பிரச்சனைகள் இடம்பெறாது. தற்போது 24 வீதமாக இருக்கும் சிங்கள மக்களது சனத்தொகை மதிப்பீடு எதிர்காலத்தில் அதனைத் தாண்டிச் செல்லாமல் இருப்பதற்கு நாங்கள் வழிமுறைகளைக் கையாள முடியும்.
எனவே அம்பாறை மாவட்ட மக்கள் மிகவும் கவனமாக எதிர்வரும் தேர்தல்களைக் கையாள வேண்டும். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்ற காரணத்தினால் தான் தமிழ் மக்களின் பிரச்சனைகள் சர்வதேச ரீதியில் பேசப்படுகின்றது. ஐநா மனித உரிமைகள் பேரவையில் எமது விடயங்கள் மாறி மாறி உள்வாங்கப்பட்டு பெசுபொருளாக இருந்து என்றோ ஒருநாள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தரத் தீர்வு வர வேண்டுமாக இருந்தால் சர்வசதேச அழுத்தமே மிக முக்கியமானது. அதற்குத் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மிக உறுதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.