தேசிய வைத்தியசாலை கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கௌரவ பிரதமர் கவனம்

குருநாகல் மாகாண பொது வைத்தியசாலையை அதி நவீன தேசிய வைத்தியசாலையாக நிர்மாணிக்கும் பணிகளின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அலரி மாளிகையில்  (21) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தியுள்ளார்.
 
வைத்தியசாலை கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கௌரவ பிரதமர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டறிந்தார்.
 
மொத்த மக்கள் தொகையின் 10 சதவிகித மக்களுக்கு இவ்வைத்தியசாலை ஊடாக சேவைகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன், குருநாகல் மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்கள் நேரடியாக இவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற முடியும்.
 
கௌரவ பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய சிறப்பு வசதிகளுடன் இப்புதிய வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
 
பேருந்தில் வருகை தரும் நோயாளிகளுக்கு விசேட பேருந்து சேவை மற்றும் வைத்தியசாலை வளாகத்தினுள்ளேயே பேருந்து நிலையமொன்றை அமைத்தல், முதல் தடவையாக வைத்தியசாலையொன்றை கவர்ச்சிகரமான பசுமை கருத்தாக்கத்தின் கீழ் நிர்மாணித்தல், போதனா வைத்தியசாலை மற்றும் சத்திரசிகிச்சை, சிறுவர் மற்றும் மகப்பேறு ஆகிய துறைகளில் உயர்மட்ட சேவையை வழங்கல், குருநாகல் மாவட்டம் இந்நாட்டின் அதிக விகாரைகள் உள்ள பிரதேசம் என்பதால் பிக்கு வார்ட்டு வளாகம் மற்றும் வைத்தியசாலையிலிருந்து அதிவேக நெடுஞ்சாலை மற்றும் புகையிரத நிலையத்திற்கு நேரடி போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தல் இவற்றில் பிரதான அம்சமாகும்.
 
கௌரவ பிரதமரின் ஆலோசனைக்கமைய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சுகாதார அமைச்சு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்து திட்டமிடப்பட்டுள்ளது.
 
குருநாகல் மாவட்ட வைத்தியசாலையில் தற்போது முன்னெடுக்கப்படும் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய கட்டுமான பணிகள் இடம்பெற வேண்டும் என கௌரவ பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
 
இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊடாக புதிய வைத்தியசாலையின் கட்டுமானத்திற்கான நிரப்புதல்களை மூன்று மாதக் காலப்பபகுதிக்குள் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான நிலத்தை கையகப்படுத்தல் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் செயற்படுத்த கௌரவ பிரதமர் ஆலோசனை வழங்கினார்.
 
இவைத்தியசாலைக்கு மேலதிகமாக வடமேல் மாகாண பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக்காக இவ்வபண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி 602 மில்லியன் ரூபாயாகும் என இச்சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இதன்போது கொவிட் தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டம் குறித்து கவனம் செலுத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தடுப்பூசி வழங்கலை செயற்திறன் மிக்கதாக முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டினார்.
 
கணினி பயன்பாட்டின் மூலம் ஒவ்வொரு நபரதும் கையடக்க தொலைப்பேசிக்கும் தடுப்பூசி தொடர்பில் விழிப்பூட்டும் வேலைத்திட்டம் மற்றும் தொழில்நுட்ப பாவனையற்ற மக்களுக்கு மற்றுமொரு வேலைத்திட்டம் ஊடாக இந்நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பிரதேச அபிவிருத்தி குழு மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரை இணைத்து கொள்ளும் முறை குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெளிவூட்டினார்.
 
குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ, பவித்ரா வன்னிஆராச்சி, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான பீ.வை.ஜீ.ரத்னசேகர, சுமித் உடுகும்புர, சமன்பிரிய ஹேரத், சரித்த ஹேரத், மஞ்சுளா திசாநாயக்க, பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ, சுகாதார அiமைச்சின் செயலாளர் எஸ்.எச்.முனசிங்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பீ.கே.ரணவீர, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சம்பத் இந்திக குமார ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts