இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதை அடுத்து சென்னையில் அவர் வீடு உள்ள பகுதியில் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது.
அந்த பகுதி மக்கள் இனிப்பு வழங்கி அபிநந்தன் விடுதலையாவதை கொண்டாடினர்.
விடுதலை செய்தி மகிழ்ச்சி தருவதாக மக்கள் தெரிவித்தனர்.
இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை புதன்கிழமை தாக்குதல் நடத்தியபோது இந்திய – பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் ஒரு இந்திய விமானம் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்மா-வை பாகிஸ்தான் தன் பிடியில் எடுத்தது.
முன்னதாக, அபிநந்தன் வர்மாவை ஒரு கும்பல் தாக்கும் படங்கள் வெளியாயின. பிறகு மாலை பாகிஸ்தான் வெளியிட்ட ஒரு காணொளியில் காபி அருந்தியபடி பேசும் அபிநந்தன், தம்மை பாகிஸ்தான் ராணுவம் மரியாதையாக நடத்துவதாகத் தெரிவித்தார்.
இதனிடையே அபிநந்தனை கண்ணியமாக நடத்தவேண்டும் என்ற குரல்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் எழுந்தன. பிறகு, அபிநந்தனை விடுதலை செய்யவேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. சமூக ஊடகத்திலும் இந்தக் கோரிக்கை எதிரொலித்தது.
இந்நிலையில், அபிநந்தனை விடுதலை செய்வதன் மூலம் போர்ப் பதற்றம் தணியும் என்றால் அவரை விடுதலை செய்யத் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி அறிவித்தார். இந்நிலையில்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவரை விடுதலை செய்யும் முடிவை அறிவித்தார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான்.
அமைதியின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் இம்ரான் கான் கூறியதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆர்ப்பரித்தனர்.