வடக்கு மாகாண சபையில் சட்டவலுவுள்ள அமைச்சர் சபை இல்லை. என்பதை பதிவு செய்துகொள்கிறேன் எனக் கூறியிருக்கும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், அமைச்சர் சபை குழப்பத்திற்கு தீர்வு காண்பதற்கு இனிமேலும் முயற்சிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 132 ஆவது அமர்வு (வியாழக்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது அவை தலைவர் மேலும் கூறுகையில், “29.06.2018 ஆம் திகதி தொடக்கம் சட்டவலுவுள்ள அமைச்சர் சபை ஒன்று வடமாகாணசபையில் இல்லை. இதனை சபை ஏற்றுக்கொண்டு பதிவு செய்து கொள்கின்றது.
இதேபோல் அரச அதிகாரிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் புரிந்துகொண்டு தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளவேண்டும். அவ்வாறு நடந்துகொள்ள தவறினால் பிற்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மேலும் நீதிமன்றம் தமக்கு உத்தரவிடவில்லை என அதிகாரிகள் நினைக்ககூடாது. நீதிமன்றம் தனித்தனியே ஒவ்வொரு கதவையும் தட்டி கூறிக்கொண்டிருக்காது.
அதேபோல் சபை தவறாக வழிநடத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டையும் சபை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. அதனை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இதற்கு மேல் நடப்பவற்றை கணக்காய்வாளர் நாயகம் பார்த்துக்கொள்வார்” என்றார்.