அம்பாறை நகரில் டெல்டா திரிபு நோயாளி!அம்பாறை மாவட்டத்தில் பதட்டம்: பாதுகாப்பாக இருக்குமாறு பணிப்பாளர் சுகுணன் அவசர வேண்டுகோள்!

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முதல் தடவையாக அம்பாறை நகரில் டெல்டா திரிபு கொவிட் நோயாளி இனங்காணப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று(6) வெள்ளிக்கிழமை இச்செய்தி காட்டுத்தீ போல பரவியது.
 
இச்செய்தி வெளியாகியதையடுத்து மக்கள் மத்தியில் ஒருவித பீதி பதட்டம் காணப்பட்டது. பாடசாலைகள் பல பூட்டப்பட்டிருந்தன.ஒருசில பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாத்திரம் சமுகமளித்திருந்தனர். அவர்களும் இச்செய்தியையறிந்ததும் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
சில அலுவலகங்களில்  உள்ள அலுவலர்கள் ஊழியர்கள் லீவைபோட்டுவிட்டு வெளியேறினர். பொது இடங்களில் இருந்த மக்கள் வீடுநோக்கி விரைந்தனர்.
 
மொத்தத்தில் பொதுமக்கள் மத்தியில் பதட்டம் நிலவியதைக்காணமுடிந்தது.
இதேவேளை கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் பொதுமக்களுக்கு பொதுவான அறிவி;த்தலொன்றை விடுத்துள்ளார்.
 
அம்பாறை மாவட்டத்திற்குள் கல்முனைப்பிராந்தியம் வருகிறது. மூவினங்களும் அடர்த்தியாக வாழ்ந்துவருகின்ற அம்பாறை மாவட்டத்தில் இந்த டெல்டா திரிபு வைரஸ் மிகஇலகுவாக பரவவாய்ப்புண்டு.
எனவே மக்கள் முதலாவது தடுப்பூசி போட்டுவிட்டோம் என்ற அலட்சியத்துடன் இருந்துவிடாது சுகாதாரநடைமுறைகளை மிகவும் இறுக்கமாகப்பேணி தஙகளைத்தாங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
 
கடந்த ஒருசில நாட்களாக வழமைக்குமாறாக எமது பிரதேசத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்துவருகின்றன. இங்கும் ‘டெல்டா’ வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே சுகாதாரத்துறையை மாத்திரம் நம்பியிராது சுகாதாரநடைமுறைகளை முறைப்படி கடைப்பிடித்து முடியுமானவரை வீட்டிலிருங்கள் என்றார்.

Related posts