கொவிட்-19 வீரியத்தின் ஆபத்தை உணர்ந்து பொறுப்புடன் செயற்படுங்கள்;கல்முனை மாநகர மக்களிடம் முதல்வர் றகீப் உருக்கமான வேண்டுகோள்

எமது நாட்டில் கொரோனா வைரஸ் வீரியமடைந்து தீவிரமாக பரவி வருகின்ற அபாய சூழ்நிலையில், கல்முனை மாநகர வாழ் மக்கள் மிகவும் பொறுப்புணர்வோடு சுயகட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்வதன் மூலம் தம்மையும் தமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இதனை வலியுறுத்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
 
கடந்த காலங்களில் எமது அயல் நாடான இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி, தாண்டவமாடிக் கொண்டிருந்தது போன்ற ஒரு சூழ்நிலை தற்போது எமது நாட்டிலும் உருவாக்கி வருவதைக் காண்கின்றோம்.
கொரோனா தொற்றாளர்களினதும் மரணிப்போரினதும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 
 
தலைநகர் கொழும்பிலுள்ள வைத்தியசாலைகளில் கட்டில்கள் இன்றியும் இட வசதியின்றியும் கொரோனா தொற்றாளர்கள் அங்கும் இங்குமாகக் கிடந்து அவஸ்தைப்படுகின்ற அவலங்களை ஊடகங்கள் வாயிலாக கண்டுகொண்டிருக்கின்றோம். கொரோனா தொற்றாளர்களுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய ஒட்ஸிசனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
 
தற்போது எமது நாடு நான்காவது கொரோனா அலைக்கு முகங்கொடுக்க வேண்டிய அபாய நிலையை எட்டி விட்டது. இத்தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கான இயலுமை அரசாங்கத்திடம் இல்லை.
நாட்டை மீண்டுமொரு தடவை முடக்க முடியாது என்றும் அதற்கு இடமளிக்க மாட்டேன் என்றும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் (06) அறிவித்து விட்டார்.
 
நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கின்ற ஒரு படுமோசமான சூழ்நிலையில், நாடு மீண்டும் முடக்கப்படுமானால் இலங்கை இன்னொரு சோமாலியாவாக மாறி விடலாம் என்கிற அச்சமே ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாக இருப்பதை எம்மால் உணர முடிகிறது. ஆகையினால் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதென்பது சாத்தியமில்லாத ஒரு விடயமாக தெரிகிறது. இந்நிலையில் அரசாங்கம் எம்மைப் பாதுகாக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கத் தேவையில்லை. இந்த யதார்த்த நிலையை எல்லோரும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
 
நாட்டு நிலைமை இவ்வாறிருக்கையில் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது சில நாட்களாக கல்முனைப் பிராந்தியத்திலும் கொரோனா தொற்று வீதமும் மரணிப்போர் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்திருப்பதைக் காண்கின்றோம். இதுவரை இப்பிராந்தியத்தில் 86 பேர் மரணமடைந்துள்ளனர். இவர்களுள் 23 பேர் எமது கல்முனை மாநகர சபைக்குட்பட்டவர்களாவர். கல்முனைப் பிராந்தியத்தில் தொற்று வீதம் இந்த நிலையில் தொடருமாயின் எமது வைத்தியசாலைகளிலும் இடமின்றித் தவிக்க வேண்டிய அவலம் ஏற்படலாம்.
 
ஆகையினால், இந்த அபாய நிலையை உணர்ந்து, சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களை முழுமையாகக் கடைப்பிடித்து, அவரவர் சுய கட்டுப்பாடுகளுடன் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கல்முனை மாநகர வாழ் மக்கள் அனைவரையும் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன். முடியுமானவரை வீடுகளில் இருந்து கொள்ளுங்கள். வேலைத் தலங்கள், சந்தைகள் மற்றும் கடைகளுக்கு செல்வோர் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள். தேவையின்றி வெளியில் செல்வதையும் கடற்கரை, கடைத்தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கூடுவதையும் மரண வீடுகளுக்கு செல்வதையும் திருமண வைபவங்கள் மற்றும் விழாக்களில் பங்குபற்றுவதையும் முடியுமானவரை தவிர்ந்து கொள்ளுங்கள். இவையே தம்மையும் தமது குடும்பத்தினரையும் கொரோனா பிடியில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளாகும் என்பதை புரிந்து செயற்படுங்கள்.
 
இவ்வறிவுறுத்தல்களை கடைப்பிடிக்கத் தவறின், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது உறவுகளை இழந்து, ஜனாஸா கூட உங்களது பார்வைக்குக் கிடைக்காமல் மஜ்மா நகரை சென்றடையும் என்பது தவிர்க்க முடியாது போகும்- என்று முதல்வர் ஏ.எம்.றகீப் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts