அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி வருகின்றது – சம்மாந்துறையில் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

இந்த ஆட்சியாளர்கள் அப்பாவி விவசாயிகள் பதுக்கி வைத்த நெல்லைத்தான் பறித்துப் போவதற்கு வந்தார்கள். சிறிய அரிசி ஆலை சொந்தக்காரர்களுக்குத்தான் பெரிய சோதனையாக இருந்தது. ஆனால், பெரிய அரிசி ஆலை சொந்தக்காரர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. அவர்கள் நினைத்தமாதிரித்தான் அரிசியின் விலையை தீர்மானிக்கின்றார்கள். இன்று சந்தையில் கீரிசம்பாவின் விலை 225 ரூபாவுக்கு அதிகரித்துள்ளது. பசளைப் பிரச்சினையால் அடுத்த போகத்திற்கு விளைச்சலும் குறைந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாட்டில் பஞ்சம் வந்துவிடுமா என்றதொரு பிரச்சினையும் வரலாம். எவ்வாறு இருப்பினும் எங்களின் பார்வையில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி வருகின்றது என்றுதான் தெரிகின்றது.
 
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாரளுமன்ற  உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
 
முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் அணி உறுப்பினர்களில் 2020ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (07) சம்மாந்துறையில் நடைபெற்றது.
 
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
 
முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் அணியின் தலைவர் ஹாதீக் இப்றாகிம் தலைமையில் நடைபெற்ற இப்பாராட்டு வைபவத்தில் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில், 
அரசாங்கம் என்னதான் பொருளாதாரக் கொள்கைளை கடைப்பிடித்தாலும், அரசாங்கத்தின் அண்மைக் கால செயற்பாடுகள் பொருட்களின் விலைவாசி உயர்வை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பொருளாதாரக் கொள்கை இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். 
 
இன்று எல்லா இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களைப் பார்க்கின்றோம். விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். மறுபக்கத்தில் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது, சேதனப் பசளை விவகாரம் வேறொரு பிரச்சினையாக இருக்கின்றது. இப்படி ஆட்சியாளர்கள் ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடுமாறிக் கொண்டிருக்கின்ற காலமாக இருக்கின்றது. 
 
ஆட்சியாளர்கள் எல்லாவற்றிக்கும் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு வர்த்தமானி அறிவிப்பை போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது அதெல்லாம் விட்டுவிட்டார்கள். வர்த்தமானி அறிவித்தல் போட்டும் விலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களின் கட்டுப்பாட்டு விலைக்கு சாமான்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனாலே வர்த்தமானி அறிவித்தலில் எந்த பிரயோசனமும் இல்லை என்று அரசாங்கம் உணர்ந்துள்ளது. வர்த்தமானி அறிவிப்புக்களை எல்லாம் அரசாங்கம் வாபஸ் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
 
எரிபொருளின் விலையை பற்றி பேசி பிரயோசனமில்லை. அது பல மடங்கு ஏறியுள்ளது. அடுத்த 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்ற  இருக்கின்றார்கள். வரவு – செலவு திட்டத்திலே என்ன பொருட்களுக்கு விலையேறும் என்று தெரியாது. வரவு – செலவு திட்டம் சும்மா பூச்சாண்டிக்காக போடும் விசயம்தான். அதன் பிறகு வர்த்தமானி மூலம் பொருட்களின் விலைகளை கூட்டிவிடுவார்கள். 
 
வழமையாக வரவு – செலவு திட்டத்திலே சிகரெட்டின் விலையை மட்டும்தான் கூட்டுவார்கள். இன்று ஒரு இடத்திலேயும் கோலிப் (சிகரெட்) இல்லை. இப்போதே பதுக்கத் தொடங்கி விட்டார்கள்.  
 
இந்த ஆட்சியாளர்கள் அப்பாவி விவசாயிகள் பதுக்கி வைத்த நெல்லைத்தான் பறித்துப் போவதற்கு வந்தார்கள். சிறிய அரிசி ஆலை சொந்தக்காரர்களுக்குத்தான் பெரிய சோதனையாக இருந்தது. ஆனால், பெரிய அரிசி ஆலை சொந்தக்காரர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. அவர்கள் நினைத்தமாதிரித்தான் அரிசியின் விலையை தீர்மானிக்கின்றார்கள். இன்று சந்தையில் கீரிசம்பாவின் விலை 225 ரூபாவுக்கு அதிகரித்துள்ளது. பசளைப் பிரச்சினையால் அடுத்த போகத்திற்கு விளைச்சலும் குறைந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
எதிர்காலத்தில் நாட்டில் பஞ்சம் வந்துவிடுமா என்றதொரு பிரச்சினையும் வரலாம். எவ்வாறு இருப்பினும் எங்களின் பார்வையில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி வருகின்றது என்றுதான் தெரிகின்றது. இந்த ஆட்சியாளர்கள் எடுத்ததெல்லாம் பிழைத்துக் கொண்டுதான் போகின்றது.

Related posts