அரசாங்கமானது அத்தியாவசியப் பொருட்களின் விலையினை அதிகரித்திருப்பதனால் மக்களின் பொருளாதார உட்கட்டமைப்பு பாரிய பின்னடைவு
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆதங்கம்
அன்றாடம் கூலித்தொழில் செய்து மிகக் குறைந்தளவான வேதனத்தினைப் பெறுகின்ற பல்லாயிரக் கணக்கான குடும்பங்களின் அவலமான நிலையினை சிந்திக்காது அரசாங்கமானது அத்தியாவசியப் பொருட்களின் விலையினை நாளுக்கு நாள் இருமடங்காக உயர்த்துகின்ற செயற்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகவுள்ளதாகவும் இது தொடர்பாக அரசாங்கமானது மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தினை காரணமாகக் கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலையினை அதிகரிக்கின்றமை கீழ்தர ஊதியத்தினை பெறுகின்ற மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாட்டின் அபிவிருத்தியில் நன்னிறைவில் மிக முக்கியமான விடயமாகத் திகழும் உழைப்பு மூலதனம் கல்வி ஆகிய மூற்றிலும் பின்னடைவான தன்மை காணப்படுமாயின் நாட்டின் அபிவிருத்தி இலக்கில் பாரிய பின்னடைவு ஏற்படும் அவ்வாறான நிலைமையிலிருந்து நாட்டினை கட்டியெழுப்ப வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமையானது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்வில் பாரிய பின்னடைவான தன்மையினை ஏற்படுத்தியுள்ளது.அரசாங்க துறையில் தொழில் புரிகின்ற உத்தியோகத்தர்கள் தமது வேதனத்திற்கு ஏற்ற வகையில் வாழ்க்கையினை ஓரளவேனும் கொண்டு செல்லக் கூடிய நிலையில் அன்றாடம் கூலித் தொழில் மூலமாக மிகக் குறைந்தளவான வேதனம் பெறுகின்ற மக்களின் நிலையினை சிந்திப்பார் யாரும் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையினை துரிதமாகக் குறைத்து அடிப்படை வசதிகளற்ற மக்களின் வாழ்வினை முன்னேற்றுவதற்கு அரசாங்கமானது நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டுமென அவர் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.