அரசியற் கைதிகள் விடுதலைக்கும், கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் சந்திப்பு பிற்போடப்பட்டமைக்கும் தொடர்பிருக்கலாம்

கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதிக்கிடையில் ஜுன் 16ம் திகதி ஒழுங்குபடுத்தப்பட்ட சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டமையும், ஜுன் 22ம் திகதி பாராளுமன்றத்தில் அரசியற் கைதிகளின் விடுதலை சம்மந்தமாக அமைச்சர் நாமல் பேசியமையும், பாராளுமன்றில் உரை நிகழ்த்தி வெறுமனே இரண்டே நாட்களில் அரசியற் கைதிகளின் விடுதலை இடம்பெற்றமையுமானது அரசின் திட்டமிட்ட அரங்கேற்றம் என்றே எண்ணத் தோணுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.


ஜனாதிபதி கூட்டமைப்பினைச் சந்தித்த பின்னர் அரசியற் கைதிகளின் விடுதலை நடைபெற்றிருந்தால் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தையின் நிமித்தமே அரசியற் கைதிகள் விடுதலையானார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் என்பதற்காகவே சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் சந்திப்பு பிற்போடப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த பொசன் விடுமுறையின் போது ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு அடிப்படையில் தமிழ் அரசியற் கைதிகள் பதினாறு பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த அரசியற் கைதிகள் விடுதலைக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான ஜனாதிபதியின் சந்திப்பு பிற்போடப்பட்டமைக்கும் தொடர்பிருக்கலாம் என்றே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் இலங்கைக்கு மேற்குலக நாடுகளில் இருந்து பலவிதமான அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றது. காரணம் இலங்கை அரசு சீனாவை முற்றுமுழுதாக நம்பி சீனாவின் வழிநடத்தலில், சீனாவின் ஒரு மாகாணம் போன்று செயற்படுவது. மேற்குலக நாடுகளுக்கோ, இந்தியாவிற்கோ விரும்பத்தகாத செயலாகவே பார்க்கப்படுகின்றது.

அந்த அடிப்படையில் அமெரிக்க காங்கிரஸில் இலங்கைக்கு எதிரான, தமிழ் மக்களுக்கு சாதகமான வடக்கு கிழக்கு தமிழர் தாயகமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற பிரேரணை முன்மொழியப்பட்டிருக்கின்றது. அதற்கு மேலதிகமாக ஐரோப்பிய பாராளுமன்றத்திலே இலங்கையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற பிரேரணை 628 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியிருக்கின்றது. பங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவில்லை என்றால் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அழுத்தங்களின் காரணமாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கடந்த ஜுன் 22ம் திகதி நாமல் ராஜபக்ஷ அவர்களினால் பாராளுமன்றத்திலே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதற்கிடையில் கடந்த ஜுன் 16ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டு அது பிற்போடப்பட்டது. ஒழுங்குபடுத்தப்பட்ட சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டமையும், ஜுன் 22ம் திகதி பாராளுமன்றத்தில் அரசியற் கைதிகளின் விடுதலை சம்மந்தமாக அமைச்சர் நாமல் பேசியமையும், பாராளுமன்றில் உரை நிகழ்த்தி வெறுமனே இரண்டே நாட்களில் அதாவது, ஜுன் 24ம் திகதி அரசியற் கைதிகளின் விடுதலை இடம்பெற்றமையுமானது அரசின் திட்டமிட்ட அரங்கேற்றம் என்றே எண்ணத் தோணுகின்றது. ஏனெனில் நீண்டகாலமாக அரசியற் கைதிகளாக இருக்கும் சுமார் 90க்கும் மேற்பட்ட அரசியற் கைதிகளில் யார் யார் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற விபரங்கள் இரண்டே நாட்களுக்குள் செய்து முடிக்கும் அளிவிற்கு அரசாங்கம் அக்கறைகொண்ட விடயம் அல்ல.

இவ்வாறு விடுதலை செய்யப்படும் அரசியற் கைதிகளின் தெரிவு ஜுன் 16ம் திகதி கூட்டமைப்பின் சந்திப்பிற்கு முன்னமே இடம்பெற்றிருக்க வேண்டும். பெயரளவிலே ஜுன் 22அம் திகதி பாராளுமன்றத்தில் அறிக்கை விட்டு ஜுன் 24ம் திகதி அவர்களை விடுதலை செய்திருக்க வேண்டும்.

எனவேதான் 16ம் திகதி ஜனாதிபதி கூட்டமைப்பினைச் சந்தித்த பின்னர் இந்த அரசியற் கைதிகளின் விடுதலை நடைபெற்றிருந்தால் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தையின் நிமித்தம், அதன் அழுத்தத்தினால் தான் கைதிகள் விடுதலையானார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படும். இதனால் கூட்டமைப்பிற்கு அரசியல் ரீதியாகச் செல்வாக்கு உயரலாம் என்ற காரணத்தினால் தான் கூட்டமைப்புடனான சந்திப்பினைப் பிற்போட்டு அரசியற் கைதிகளில் விடுதலையின் பின்னர் ஒரு திகதியை வழங்குவதற்கு ஜனாதிபதி முற்பட்டிருக்கின்றார் என்று கருதுகின்றேன் என்று தெரிவித்தார்.

Related posts