பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்த பின்னரும் யுத்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் விடுதலைப்புலி உறுப்பினர்களைத் தடுத்து வைப்பதில் அர்த்தம் இல்லை என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பு கோட்டையிலுள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்து பொது மன்னிப்பு வழங்கியதன் பின்னர் இந்தப் பிரச்சினை குறித்து மீண்டும் பேச வேண்டியதில்லை.
யுத்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் இராணுவத்தினரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர்களை சமூக மயப்படுத்த நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், இனிமேலும் சிறைப்படுத்துவதில் அர்த்தமில்லை.
இந்நிலையில் கே.பி போன்ற பல விடுதலைப்புலித் தலைவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடும்போது யுத்தக் குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்