அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும்: சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புநேற்று(திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அரசியல் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களைக் குறுகிய கால புனர்வாழ்வு வழங்கி விரைவில் விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவருகின்ற எட்டுப் பேரினதும் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் உயிரைக் காப்பாற்றவேண்டும்.

ஒன்பது வருடங்களுக்கு மேலாக முறையான விசாரணையோ அல்லது விடுதலையோ இல்லாமல் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மீண்டும் மீண்டுமாக அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்கின்ற உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும்.

மேலும், அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற வகையில் உடனடியாக விடுவிக்குமாறும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்ள கோரியும் தொடர்ச்சியாக நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

அரசியல் கைதிகள் என்ற பெயரில் சிறையில் அடைக்கப்பட்டு வாழ்வுரிமை மறுக்கப்படும் சமூக அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க இன, மத, மொழி மற்றும் பிரதேச எல்லைகளைத் தாண்டி மனிதாபிமானமுள்ள அனைவரும் அணிதிரள வேண்டும்” என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts