அரச கரும மொழிகள் திணைக்களத்தினால்
அரச அலுவலகர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள மற்றும் தமிழ் மொழிக் கற்கைநெறிகள் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 18/2020 சுற்றுநிருபத்திற்கு அமைவாக தமிழ் பேசும் அரச அலுவலகர்களுக்கு சிங்களமொழி பாடநெறியும், சிங்கள மொழி பேசும் அரச அலுவலகர்களுக்கு தமிழ் மொழி பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இவ்வாறான பாடநெறிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பல அலுவலகங்களிலும் திணைக்களங்களிலும் நடைபெற்று வரும் நிலையில், (2021/04/01) நேற்று வியாழக்கிழமை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு
அபிவிருத்தி உத்தியோகத்தர் PMM.ராஷித் அவர்களின் நெறிப்படுத்தலில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் உதவிச் பிரதேச செயலாளர் SM.அல் அமீன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நாட்டின் நிர்வாகத்துறையினைச் சிறப்பாக முன்னெடுக்கும் வகையிலும், சகல இன மக்களிடத்திலும் மொழி வழியிலான சமாதானம், ஐக்கியம், இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வகையிலும் அரச உத்தியோகத்தர்களை இரு மொழிப்பயன்பாட்டிற்கு தேர்ச்சி பெறச்செய்யும் நோக்கில் தமிழ் பேசும் அரச ஊழியர்களுக்கு சிங்களமொழி பாடநெறியும், சிங்களமொழி பேசும் அரச ஊழியர்களுக்கு தமிழ்மொழி பாடநெறியும் அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இப்பயிற்சிநெறிக்கு வளவாளராக மட்/மம/காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் கடமையாற்றும் இரண்டாம் மொழி ஆசிரியரும் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியருமான MM செய்னுதீன் கலந்து கொண்டு பாடநெறிகளை ஆரம்பித்து வைத்தார்