அரச சேவைகள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான 200 மணித்தியாலங்களை கொண்ட 25 நாள் சிங்கள பயிற்சி வகுப்பின் இறுதி நாள் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் இன்று (19) மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் அவர்கள் கலந்துகொண்டதுடன், குறித்த நிகழ்விற்கு கௌரவ அதிதியாக தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம்
கலாநிதி பிரசாத் ஆர்.ஹெரத்,
விசேட அதிதியாக கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம்.மாஹிர், பயிற்சிநெறியின் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களென பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் அதிதிகளின் சிறப்புரைகள் இடம் பெற்றதுடன் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்களினால் கண்கவர் கலை கலாசார நிகழ்வுகள் சிங்கள மொழியில் நிகழ்த்தப்பட்டன.
இப் பயிற்சி வகுப்பின் மூலம் உத்தியோகத்தர்கள் சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்து கொள்வதுடன் தங்களது வேலைகளையும் இலகுபடுத்திக் கொள்ள வழிவகுக்கின்றது. தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துடன் சிங்கள மொழி மூலம் வேலைகளை திறம்பட மேற்கொள்ளும் நோக்கத்துடனேயே இப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.