அம்பாறை, பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையையடுத்து, அவசரஅவசரமாக வெளியேறி வருவதாக, அறுகம்பை சுற்றுலா அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் எம்.எச்.அப்துல் றஹீம், (30) தெரிவித்தார்.
பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, படையினர் மேற்கொண்டு வரும் சோதனை நடவடிக்கைகள், கரையோரப் பிரதேசங்களில் படையினரின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுதல், அச்சம் காரணமாக போன்ற காரணிகளால், சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேறி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அறுகம்பைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை ஆரம்பிக்கப்பட்டிருந்த வேளையிலே, நாட்டில் அசாதாரண நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், முன்கூட்டியே சுற்றுலா விடுதிகளில் தங்களுக்கான அறை ஒதுக்கீடுகளை முற்பதிவு செய்த சுற்றுலா பயணிகள், தமது முற்பதிவுகளை இரத்துச் செய்துள்ளதாகவும், அவர் கூறினார்.
சுற்றுலா பயணிகளின் வெளியேற்றம் காரணமாக அப்பிரதேசத்திலுள்ள ஓட்டோகளின் சாரதிகள், பழக்கடை வர்த்தகர்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும், தெரிவித்தார்.
சுற்றுலா பயணிகளின் வருகை அறுகம்பை பிரதேசத்தில் 60 சதவீதமாக குறையுமெனவும், இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.