யுத்த காலத்தைக் காரணம் காட்டி கிழக்கு மாகாணத்திலுள்ள பல கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்தவர்கள் பதில் அதிபர்களாக இருந்து வருவதுடன், வெற்றிடமுள்ள பாடசாலைகளுக்கு விண்ணப்பம் கோரும்போது பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இச்செயற்பாடானது கல்வி அமைச்சின் 98ஃ23ம் இலக்க சுற்று நிரூபத்துக்கு முரணானதும், இலங்கை அதிபர் சேவையில் நியமனம் பெற்ற அதிபர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியும், அடிப்படை உரிமை மீறும் செயலுமாகும் என கிழக்கு மாகாண அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
சம்மாந்துறை கல்வி வலயத்தில் அதிபர் வெற்றிடமுள்ள பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு, அதிபர் தரத்திலுள்ளோரை நியமிப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தால் 12 பாடசாலைகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில், இப்பாடசாலைகளில் பதில் அதிபர்களாக இருந்து வரும் ஆசிரியர்கள் தங்களுடைய இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, கல்விக் கொள்கைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழு மற்றும் அரசியல்வாதிகளை நாடிச் செல்வதைக் காணமுடிவதோடு, பத்திரிகைகளிலும் அறிக்கைவிட்டு வருகின்றனர்.
இதுவிடயம் குறித்து கிழக்கு மாகாண அதிபர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு கடந்த 2005 விண்ணப்பம் கோரியது. அவ்விண்ணப்பத்திற்கு அமைவாக 2006ம் ஆண்டில் பரீட்சை நடாத்தப்பட்டு 2009, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் இலங்கை அதிபர் சேவையைச் சேவையில் 3 மற்றும் 2 ஆகிய தரங்களில் நியமனங்களை வழங்கியது. அவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அநேகமானோர் இதுவரை பாடசாலைகளில் பொறுப்பதிபர்களாக நியமிக்கப்படாது இருந்து வருகின்றனர்.
இதேபோன்று கடந்த 2015இல் நடாத்தப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையிலும் சுமார் 3000இற்கு மேற்பட்டோருக்கு, இலங்கை அதிபர் சேவையில் 3ம் தரத்தில் கடந்த 2016 மே மாதம் நியமனம் வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு நியமனம் வழங்கப்பட்ட அதிபர்களை பொறுப்பு அதிபர்களாகவும், பிரதி அதிபர்களாகவும், எதவி அதிபர்களாகவும் நியமித்துள்ளது. இதேநேரம் பதில் அதிபர்கள் உள்ள பாடசாலைகளில், பதில் அதிபர்கள் பாடசாலைகளில் இருந்து எடுக்காமல், பரீட்சையின் மூலம் கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற அதிபர்களை பாடசாலைகளில் உதவி அதிபர்களாகவும், பிரதி அதிபர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதில் ஏற்கனவே 2102இல் இலங்கை அதிபர் சேவையில் நியமனம் பெற்றோர்களும் பாடசாலையின்றி உள்ளனர்.
இது இவ்வாறிருக்க கடந்த யுத்தகாலத்தில் 2010ம் ஆண்டிற்கு முன்னிருந்து பல பாடசாலைகளில் பதில் அதிபர்களாக கடமையாற்றியவர்கள் என்ற பெயரில் சுமார் 2500 ஆசிரியர்களுக்கு கடந்த அரசாங்கத்தில் மிகை நியமன அதிபர் என்ற அடிப்படையில் 2012இல் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு நியமனம் வழங்கப்பட்டவர்கள் தாங்கள் கடமையாற்றிய பாடசாலைகளிலேயே தொடர்ந்து கடமையாற்றி வருகின்றனர்.
இதைக்காரணம் காட்டியும், யுத்தகாலத்தில் நாங்கள் கடமையாற்றியவர்கள் என்ற காரணங்களை வைத்தும், தற்போதும் கிழக்கு மாகாணத்தில் பல பாடசாலைகளில் ஆசியர்கள் அதிபர்களாக இருந்து கொண்டு, வலயக் கல்வி அலுவலகங்களினால் விண்ணப்பம் போரப்படும்போதெல்லாம் அரசியல் செல்வாக்குகளை வைத்து கோரப்பட்ட விண்ணப்பத்திற்கு நேர்முகப் பரீட்சை நடாத்தவிடாமல் தடுத்துவருகின்றனர்.
யுத்தம் முடிந்து பல வருடங்கள் ஆகியும், தாங்கள் யுத்காலத்தில் கடமைபுரிந்தவர்கள் என்று போலிக் காரணங்களைக் கூறி வருகின்றனர். இப்பதில் அதிபர்கள் 2012இன் பின்னரே பாடசாலைகளில் இருந்து வருகின்றனர். அதே நேரம் 2009, 2010, 2012 ஆகிய காலப்பகுதியில் இலங்கை அதிபர் சேவையில் நியமனம்பெற்றவர்கள் இருந்தபோதும் இவர்கள் எவ்வாறு பாடசாலைகளைக் கைப்பற்றினார்கள் என்பது வியப்பாகவே இருக்கின்றது. இவ்வாறான நிலை தொடருமானால், இலங்கை அதிபர் சேவையில் நியமனம் பெற்றோர் ஒரு பாடசாலையிலேனும் பொறுப்பு அதிபர்களாக கடமையாற்றாது ஓய்வு பெறவேண்டிய நிலையே ஏற்படலாம். காரணம் அதிகமான அதிபர்கள் 50 வயதைத் தண்டியவர்களாக உள்ளனர்.
பதில் அதிபர்களாக கடமைபுரியும் ஆசிரியர்களுக்கு, வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை தேவையில்லை, ஆங்கில மொழியில் சித்தியெய்தவேண்டிய தேவையில்லை, மற்றைய தேசிய மொழிகளில் சித்தியடையவேண்டியதில்லை, பாடசாலை முகாமைத்துவ டிப்புளோமா சித்தியெய்தவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அதிகரித்த சம்பளத்துடன் அதிபர் என்ற பெயரில் பாடசாலைகளில் இருந்து வருகின்றனர்.
மேற்குறிப்பிட்ட அனைத்துத் தகைமைகளையும் பூர்த்தி செய்த தரம் பெற்ற அதிபர்கள், குறைந்த சம்பளத்துடனும், குறைந்த சம்பள உயர்ச்சியுடனும் பாடசாலகளில் உதவி அதிபர்களாகவோ, பிரதி அதிபர்களாகவோ இருந்து வருகின்றனர். ஆகவே இவ்விடயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர், செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இலங்கை அதிபர் சேவையில் நியமனம் பெற்ற அதிபர்களுக்கு, பாடசாலைப் பொறுப்பு அதிபர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிழக்கு மாகாண அதிபர் சங்கம் வேண்டிக்கொள்வாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் மேலும் புதிதாக இலங்கை அதிபர் சேவையில் 3ம் தரத்தில் சேர்த்துக் கொள்வதற்காக கடந்த வருடம் இறுதிப்பகுதியில் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதும், விரைவில் இதற்கான போட்டிப்பரீட்சை நடைபெறவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்,