மண்முனைப் பிரதேச சபை பிரிவிலுள்ள ஆரையம்பதி பொதுச் சந்தை நேற்றிலிருந்து (01) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஆரையம்பதி சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆரையம்பதி பொதுச் சந்தையிலுள்ள வியாபாரிகள் சிலருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது வியாபாரியொருவருக்கு கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, ஆரையம்பதி பொதுச் சந்தையை தற்காலிகமாக மூடிய சுகாதார அதிகாரிகள், வியாபாரிகளுக்கு விழிப்பூட்டல் நடவடிக்கையையும் மேற்கொண்டனர்.
அத்துடன், கிருமித் தொற்று நீக்கம் செய்யவும் நடவடிக்கையையும் முன்னெடுத்தனர்.
மண்முனைப் பிரதேச சபைத் தவிசாளர் டி.தயானந்தன், ஆரையம்பதி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.புலேந்திரகுமார், பொதுச் சுகாதார பரிசோதகர் கே.ஜே.சங்கர் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் உட்பட அதிகாரிகள் இதன்போது சமூகமளித்திருந்தனர்.
சந்தையை முழுமையாக கிருமி தொற்று நீக்கம் செய்த பின்னர் மீளவும் சந்தையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மண்முனைப் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.