இன,மொழி ஒற்றுமையை முன்கொண்டு செல்ல சிங்கள மொழியை கற்கவேண்டியது அவசியமாக அமைகின்றது பிரதிப்பணிப்பாளர் கணேசமூர்த்தி-கோபிநாத் தெரிவித்தார்.

(க.விஜயரெத்தினம்)
இன,மொழி ஒற்றுமையை முன்கொண்டு செல்ல சகோதர மொழியாகிய சிங்கள மொழியை கற்கவேண்டியது நிகழ்காலத்தின் அவசியமாக அமைகின்றது என
தேசிய ஒருமைப்பாடு சமூக முன்னேற்ற, அரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாச்சார  அமைச்சின் மொழிக்கற்கைகள் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் கணேசமூர்த்தி-கோபிநாத் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு சமூக முன்னேற்ற, அரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாச்சார அமைச்சின் கிழக்கு மாகாண நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பல்வேறு திணைக்களங்களை சார்ந்த 105 அரச ஊழியர்களுக்கான இரண்டாம் மொழிப்பயிற்சி நிகழ்வின்  நிறைவு நிகழ்வானது  அமைச்சர் மனோகணேசன் அவர்களுடைய ஆலோசனைக்கிணங்க அமைச்சின் மொழிக்கற்கைகள் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் கணேசமூர்த்தி-கோபிநாத் அவர்களின் தலைமையில் தாழங்குடாவில்(12) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சின் கிழக்குமாகாண நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சூர்யகுமார்,முகாமைத்துவ உத்தியோகத்தர் கே.சாருகாசன் மற்றும் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற  இரண்டாம் மொழி பயிற்சிநெறி செயலமர்வில் வளவாளர்களாக எம்.கே திலினி மதுசிக,ஞா.யசோதாரணி,ஏ.பிரேமிளா கலந்துகொண்டார்கள்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

இரண்டாம் மொழியான சிங்கள மொழி தேர்ச்சியில்லாதவர்கள் எதிர்காலத்தில் புறக்கணிக்கப்படுவார்கள். மொழி ஆற்றலை வளர்ப்பதன் ஊடாகவே எதிர்காலத்தில் ஒரு முழுமையான புத்திஜீவிகளாக திகழமுடியும்.இதன்மூலம் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும். அரசியலை மறந்து சிங்கள மொழி ஆற்றல் விருத்தியை மேம்படுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.சகோதர சிங்கள மாணவர்கள்,அரச உத்தியோகஸ்தர்கள்,கட்டாயமாக நமது தமிழ்மொழியினை கற்க முன்வந்துள்ளதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.விரைவில் தமிழ் பேசும் சிங்கள அலுவலகர்கள் வடகிழக்கு மாகாணங்களில் கடமையாற்றுவதற்கு  வரஇருக்கின்றார்கள்.

அதனால் முன்னெச்சரிக்கையாக வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் அலுவலகர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் சிங்கள அறிவு இல்லையெனில் புறக்கணிக்கப்படக்கூடிய துர்பாக்கிய நிலை கூட எதிர்காலத்தில் தமிழ் மொழிபேசும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்படலாம். எனவே இத்தகைய அவலநிலையை தவிர்த்து எமது நாட்டின் இன,மொழி ஒற்றுமையை முன்கொண்டு செல்ல சகோதர மொழியாகிய சிங்கள மொழியை கற்கவேண்டியது நிகழ்காலத்தின் அவசியமாக அமைகின்றது என தெரிவித்தார்.

Related posts