பணப்பெட்டி,சவப்பெட்டி அரசியல்வாதிகளினால் முன்னெடுக்கப்படும் அரசியல் செயற்பாட்டை வடகிழக்கு தமிழ்மக்களால் இனியும் தூக்கி நிறுத்த முடியாது.

(க. விஜயரெத்தினம்) 
தமிழ்த் தேசியம்,சமஸ்டி பேசும் தமிழ்தேசிய கூட்டமைப்பினரால் முன்னெடுக்கப்படுகின்ற சுயலாப தரகுப்பணப்பெட்டி அரசியலையோ அல்லது விக்னேஸ்வரன்,கஜேந்திரகுமார்,சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்களால் முன்னெடுக்கப்படும் சவப்பெட்டி அரசியல்வாதிகளின் அரசியலையோ எவராலும் இனித் தூக்கி நிறுத்த முடியாது என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான டக்ளஸ்  தேவானந்தா தெரிவித்தார்.
 

சமகால அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக ஆராயும் விஷேட கூட்டம் மட்டக்களப்பு கூட்டுறவு கட்டிடத்தொகுதியில் இன்று(13)வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00மணியளவில் பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாதன் ஏற்பாட்டிலும்,தலைமையிலும் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் தமிழர் மகாசபையின் தலைவர் விக்னேஸ்வரன்,கிழக்குத்தமிழர் கூட்டமைப்பின் தலைவர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், நாட்டின் தற்போதைய அரசியல்நிலைமை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் பிரதிநிதியாக அவரது சிபாரிசில் வரவிருக்கின்ற வேட்பாளருக்கே நாங்கள் ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.அதற்காக நாங்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து ஆதரிக்கின்றோம்.எமது மக்கள் எதிர்கொண்டு வருகின்ற அரசியல் உரிமைக்கான பிரச்சனையை முதலில் எடுத்துள்ளோம்.ஆனால் தமிழ்மக்களின் அரசியல் உரிமைக்கான பிரச்சனை தமிழ்தேசிய கூட்டமைப்பின் கரங்களில்தான் தங்கியிருக்கின்றது.உறியிலே வெண்ணெயை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் நெய் கலைஞ்சதுபோல தமிழ் தலைமைகளின் அந்த அலைச்சல்தான் இவ்வளவு காலமும் தமிழ்மக்கள் அரசியல் உரிமையை பெறமுடியாமல் அதனை அனுபவிக்க முடியாமல் உள்ளது.

தமிழ்மக்கள் மத்தியில் இன்று மூன்று வகையான அரசியல் கருத்து செயற்படுத்தப்பட்டுள்ளது.அதில் ஒன்று தமிழ் மக்களிடையே இன்று வீழ்ச்சியடைந்துவரும் தமிழ்த் தேசியம்,சமஸ்டி என்று தமிழ்தேசிய கூட்டமைப்பால் பேசப்படும் சுயலாப தரகுபணப்பெட்டி அரசியல் செயற்பாடு.மற்றையது விக்னேஸ்வரன்,சுரேஸ் பிரேமச்சந்திரன்,கஜேந்திரகுமார் போன்றோர்களினால் செயற்படுத்தும் சவப்பெட்டி அரசியல் நிலையை எவராலும் இனித் தூக்கி நிறுத்த முடியாது.இரண்டு பேருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால் பிரச்சனைகளை தீராத பிரச்சனையாக வைத்திருப்பது அவர்களின் எண்ணமும்,நோக்கமாகவும் உள்ளது.எங்களுடைய எண்ணம் என்னவென்றால் நடைமுறையாக பிரச்சனைகளை அனுசரித்துக்கொண்டு உரியவர்களை அனுகி தீர்பதுதான் எங்களின் எண்ணமும் நோக்கமும் ஆகும்.

எங்களின் வழிமுறைகளை பின்பற்றுவதால் அழிவுகள்,துன்பங்கள்,துயரங்கள்,இடம்பெயர்வுகள் இடம்பெறாமல் இப்போது இருப்பதை பாதுகாத்து முன்னோச்சிச் செல்வது ஆகும்.இதற்கு தமிழ்மக்கள் அணிதிரண்டு ஆதரவு,ஆணை தந்தால் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் விரைவாக தீர்க்கப்படும்.நான் எந்த சந்தர்ப்பத்திலும் சொல்லப்போறதில்லை.ஆட்சியாளர்கள் எங்களை ஏமாற்றிப்விட்டார்கள் என்றோ அல்லது சர்வதேசம், இந்தியா ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லமாட்டேன்.ஆனால் தமிழ்மக்கள் எந்த வாக்குறுதியை கொடுக்கின்றனரோ, எது நியாயமான கோரிக்கை,பிரச்சனைக்கு அதற்கு விரைவில் தீர்வு காணுவேன்.

ஆனால் இவர்களை நம்புவதற்கும் தமிழ் மக்கள் இப்போது தயாராக இல்லை என்பதாலேயே எமது மக்கள் தமது பிரச்சனைகளுக்கு தீர்வை வலியுறுத்தி வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.கிழக்கு மாகாணத்தில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு மிகவும் அவசியமாகும்.நிலத்தையும்,தமிழ்மக்களின் நலன்களையும் பாதுகாப்பதோடு தமிழர்களின் இருப்பு பறிபோகாமல் பாதுகாப்பதுதான் கிழக்கு தமிழர்களின் எண்ணமும் திண்ணமும் ஆகும்.விட்டுக்கொடுப்பு சகிப்புத்தன்மையுடன் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பை தமிழ்மக்கள் கட்டிப்பாதுகாக்க வேண்டும்.

தமிழ் மக்கள் வாக்களித்ததால் “நல்லாட்சி” என்று கூறிக்கொண்டு ஆட்சி நடத்தியவர்களும், அந்த ஆட்சிக்கு முண்டு கொடுத்து பாதுகாத்தவர்களும், அரசியலில் எதிர்க்கட்சியும் ஆட்சியில் பங்கெடுத்திருந்த நிலையில் இனி எப்போதும் சாத்தியப்படாத நல்ல சந்தர்ப்பம் வாய்த்திருந்தபோது அதைப் பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்காதவர்களும்,இப்போது அடுத்த இரண்டு வருடத்தில் அரசியல் தீர்வை வழங்குகின்றோம் என்று கூறுவது வேடிக்கையானதாகும்.இதுவொரு ஏமாற்றும் வித்தையாகும்.

அத்தகைய உள்ளடக்கமற்ற வெற்று வாக்குறுதிகளை இனியும் நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை. அத்தகைய பொய்யான கதைகளை கூறியாவது கூட்டாக தமிழ் மக்களை ஏமாற்ற எத்தனிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கபட நாடகத்தை நம்புவதற்கும், அவர்களை நம்பி வாக்களிப்பதற்கும் தமிழ் மக்கள் இனித் தயாராக இல்லை.

எந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு தீர்வை தட்டில் வைத்துத் தந்துவிடுவார்கள் என்று நான் நம்பவில்லை. ஆனால் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசுகளால் மறுக்கமுடியாததும், இலங்கையின் அனைத்து இன மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், அவர்களால் முழுமையாக அனுபவிக்கப்படுவதுமான மாகாணசபை முறைமையெனும் அரசியல் வடிவத்தை பலப்படுத்தி, பாதுகாத்து அதை நாம் எதிர்பார்க்கும் அரசியல் இலக்கு நோக்கி நகர்த்துவதே நடைமுறைச் சாத்தியமானதாகும்.

இதையே நாம் கடந்த 30ஆண்டுகளாக கூறிவருகின்றோம். இலங்கை , இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அழுல்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இவ்வாறு நாம் கூறிவருவதை விமர்சித்து எம்மைத் தூற்றியவர்களும், மாகாணசபை முறைமையை தும்புத்தடியாலும் தொட்டுப்பார்க்க மாட்டோம் என்று நிராகரித்தவர்களும் இப்போது நாம் கூறிவந்த வழிமுறையே சரியானது என்பதை ஏற்றுக்கொள்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இதைவிடுத்து நட்சத்திரங்களை கொண்டுவந்து பூமியில் நடுவோம் என்றும்,தனி ராஜியங்களை சிங்களவர்களிடமிருந்து பலாத்காரமாக பறித்துத் தருவோம் என்றும் வாக்குறுதியளித்து, உணர்ச்சியூட்டி தமிழ் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி தமது சுயலாப அரசியலை முன்னெடுக்க முடியும் என்று செயற்படும் போலித் தமிழ்த் தேசியம் பேசும் பணப்பெட்டி, சவப்பெட்டி அரசியல் நடத்தும் அனைவரையும் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் நிராகரிப்பார்கள் என்றே நம்புகின்றேன்.

இரண்டு வருடகாலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான  நிரந்தரத் தீர்வு கிடைத்துவிடும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் வடக்கில் கூட்டமைப்பினருக்கு சரிந்துள்ள ஆதரவை மீண்டும் கட்டயெழுப்பவே அவ்வாறு அவர் கூறியதாக நீங்கள் கருத்துக் கூறியிருந்தீர்கள். இனி வரக்கூடிய எந்தவொரு ஜனாதிபதியும்,  அல்லது அரசாங்கங்களும்  தமிழர்களுக்கான நியாயமான தீரவை வழங்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இல்லை

Related posts