இன்று சாதாரணதர உயர்தர வகுப்புகளுள்ள பாடசாலைகள் ஆரம்பம்மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி பற்றி பெற்றோர்கள் அறிவார்களா?

கொரோனாவால் இழந்த கல்வியை மீட்க அரசாங்கம் பல வகையான வேலைத்திட்டங்களை அமுல்படுத்தி படிப்படியாக நான்குகட்டங்களாக பாடசாலைகளை திறந்துவருகிறது.
 
அதன்படி மூன்றாம்கட்டமாக இன்று  8ஆம் திகதி தரம் 10, 11, 12, 13ஆகிய வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொண்டுவருகிறது.
 
க.பொ.த சாதாரண தரத்தின் முதல்வருடம் என அழைக்கப்படும் தரம் 10, சாதாரணதரத்தின் இரண்டாம் வருடம் என அழைக்கப்டும் தரம் 11 மற்றும் உயர்தர 1ஆம் 2ஆம் வருட மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
 
நான்காம் கட்டமாக தரம் 6முதல் தரம் 9வரையான மாணவர்களை   எப்போது அழைப்பது என்பதை இன்னும் கல்வியமைச்சு வெளியிடவில்லை. எனினும் அதுவும் அடுத்தவாரம் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
 
ஏலவே ,ஆரம்பவகுப்பு மாணவர்களுக்கான சகல பாடசாலைகளும் திறக்கப்பட்டு எவ்வித விக்கினமுமின்றி வெற்றிகரமாக பூரண அதிபர் ,ஆசிரியர் ,மாணவர் வரவுகளுடன் நடைபெற்றுவருகின்றன.
 
இவ்வாறு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுவருகையில், தமது பிள்ளைகளுக்கு உரிய சுரக்ஷத காப்புறுதி பற்றி பெற்றோர்கள் நன்கு அறிந்துவைத்திருக்கவேண்டியதவசியம். உதாரணமாக கொரோனா தனிமைப்படுத்தல் தொடக்கம் வைத்தியசாலை செலவுக்கும் கூட இச் சுரக்ஷா காப்புறுதி உதவிசெய்கிறது. இதனை அவர்கள் அறிவார்களா?
 
பெற்றோர் கட்டாயம் அறிந்திருக்கவேண்டிய ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதி பற்றிய சில தெளிவுகள்.
 
பாடசாலையில் தரம்  1-13  வரை கற்கின்ற மாணவர்கள் அனைவரும் சுரக்ஷா காப்புறுதி பெற உரித்துடையவர்கள்.
மூன்று தொகுதிகளாக இது வழங்கப்படுகிறது.
 
1.சுகாதார காப்புறுதி             2.விபத்துக் காப்புறுதி                        3.ஆயுள் காப்புறுதி                              
                                                   
 வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுதல்.
பணம் கட்டும் அரச வைத்தியசாலையில் அல்லது தனியார் வைத்தியசாலையில் மாணவர் தங்கி சிகிச்சை பெறும்போது ஒரு நாளைக்கு ரூபா. 12500.00  என்ற அடிப்படையில் 2 லட்சம் வரை காப்புறுதி வழங்கப்படுகிறது.
 
பணம் கட்டாத அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் போது ஒரு இரவுக்கு  ரூபா.1000.00  என்ற அடிப்படையில் குறித்த மாணவருக்கு காப்புறுதித் தொகை வழங்கப்படுகிறது.
 
அதேபோல் குறித்த நோய்க்கான சிகிச்சை இலங்கையில் இல்லாத போது வைத்திய ஆலோசனைப்படி வெளிநாடு செல்வதாக இருந்தால் வெளிநாட்டு சிகிச்சைக்கான செலவும் காப்புறுதியில் குறித்த மாணவனுக்கு வழங்கப்படுகிறது.
 
வைத்தியசாலையில் தங்காது வெளி வாரியாக சிகிச்சை பெறும்போது சிகிச்சை பெறுவதற்கான கொடுப்பனவு ரூ.10000.00 ஆகும்.
 
   MRI scan, CT scan ,EEG ,DMSA scan, DTPA scan, Ultrasound scan போன்றவற்றை செய்வதற்கு ஏற்படும் செலவுகளையும் காப்புறுதியில் பெற்றுக்கொள்ளலாம்.
பற்களில் இடைவெளி நிரப்புவதற்கு அல்லது கழற்றுவதற்கு ஏற்படக்கூடிய செலவுகளையும் பெறலாம்.
 
கை ,கால் உடைந்துள்ள நிலையில் ஆயுர்வேத சிகிச்சை பெறினும் அதற்கும் கொடுப்பனவு பெறலாம்.
கண்ணாடி எடுப்பதற்கும்இ காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்கள் அதற்கு உரிய உபகரணத்தை எடுப்பதற்காகவும் காப்புறுதி பணத்தைப் பெறலாம்.
 
கடுமையான நோய்களின் போது. இருதய சத்திர சிகிச்சை, புற்றுநோய் ,சிறுநீரகப் பிரச்சினைகள், தலசீமியா, செயற்கையான கை,கால்கள் கொள்வனவு செய்தல், ஈரல் சம்பந்தமான சத்திர சிகிச்சைகள் போன்றவற்றின் போது இரண்டு லட்சம் முதல் 15 லட்சம் வரை காப்புறுதித் தொகை பெறலாம்.
 
 திடீர் விபத்துக் காப்புறுதி

திடீர் விபத்துக்களின் மூலம் முழுமையாக பாதிக்கப்பட்டு ,ஆயுள்  முழுதும் அங்கவீன மாணவர்களுக்காக (உதாரணமாக இரண்டு கண்ணும் தெரியாமல் போதல் ,இரண்டு காதுகளும் கேட்காமல் போகுதல் )இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
 
அதேபோல் ஒரு கண் தெரியாமல் போதல் ஒரு காது கேட்காமல் போதல் போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை காப்புறுதித் தொகை வழங்கப்படுகிறது.,
 
தற்காலிக அங்கவீனம்
விபத்துக்களின் மூலம் தற்காலிகமாக அங்கவீனம் அடைந்து (அதாவது கை,கால் உடைந்து)
பாரம்பரிய   ஆயுர்வேத  வைத்தியரிடம் வைத்தியம் செய்து கொண்டு வீட்டில் இருந்தாலும்,
2 வாரம் முதல் 1 மாதம் வரை காலத்திற்கு ரூபா 25000.00
1 மாதம் முதல் 2 மாதம் வரை  ரூபா. 50000.00
இரண்டு மாதத்திற்கு மேற்பட்ட காலத்திற்கு ரூபா 100000.00 காப்புறுதி வழங்கப்படுகிறது.
 
தாய் அல்லது தந்தையின் இறப்பு
 
தாய் அல்லது தந்தை இறக்கின்ற நிலையில் அக்குடும்பத்தின் வருமானம்  வருடாந்தம் ரூபா 180000.00 ஐ விட குறைவாக இருந்தால் (வருமானத்தை  கிராம சேவகரும்,பிரதேச செய லாளரும் உறுதிப்படுத்த வேண்டும்) பாடசாலையில் கற்கும் ஒரு பிள்ளைக்கு இரண்டு லட்சம் ரூபா வீதம் மொத்தமாக 6 லட்சம் வரை காப்புறுதி வழங்கப்படுகிறது. பிள்ளையின் வங்கிக் கணக்கிற்கு தொகை அனுப்பப்படும்.
பிள்ளையின் மரணத்தின்போது எந்த ஒரு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படமாட்டாது.
 
குறிப்புகள்
 எந்த ஒரு நிகழ்வின் பின்னும் 90நாட்களுக்குள் இது தொடர்பான அனைத்துப்  படிவங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 90 நாட்கள் கடந்த எந்தப் படிவங்களும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இது போன்ற நிகழ்வுகளின் போது, பாடசாலையிலிருந்து இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று முழுமையாக நிரப்பி, அதில் குறிப்பிடப்படும் அனைத்து ஆவணங்களையும் சேர்த்து, அதிபர் அத்தாட்சிப் படுத்திய தன்பின்பு அருகிலுள்ள ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் காரியாலயத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
 மாறாக கோட்டக்கல்வி காரியாலயத்திற்கு அல்லது வலயக் கல்வி காரியாலயத்துக்கு அல்லது கல்வி அமைச்சுக்கு இவற்றை அனுப்பக்கூடாது.
 
2017 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் யோசனையாக முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த சுரக்ஷா காப்புறுதியின் பலன்களை எமது பிள்ளைகளுக்கும் பெற்றுக் கொடுக்க அனைவரும் முயற்சிப்போம்.
 
(கல்வி அமைச்சின் 2019.04.11ம் திகதிம் 24/2019 இலக்கமும் கொண்ட  சுற்றறிக்கை யை  செல்லுபடியற்ற தாக்கி வெளியிடப்பட்ட 2021.03.01 திகதியும்  04/2021 இலக்கமும் கொண்ட சுற்றறிக்கை யை அடிப்படையாக வைத்து இது தொகுக்கப்பட்டது. 2020.12.02 முதல் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது)

Related posts