இரட்டை வேடம் போடுகின்றமை என்கின்ற விடயம் உண்மையிலேயே ஹரிஸ் எம்பி க்குதான் மிகவும் பொறுந்தும் ஏனெனில் அவரின் அரசியல் மேடைப் பேச்சுகளிலே வீரவசனங்களைப் பேசிவிட்டு சந்தர்ப்பம் வருகின்ற போது கைகளை உயர்த்தி கால்களிலே விழுந்து அடிபணிகின்ற ஒரு விடயத்தைத்தான் அவர் எப்போதும் கையாளுகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மக்களைப் படுமோசமாக பாதிக்கும் வகையிலேயே இருக்கின்றது. அதிலும் தமிழ் மக்களைப் பொருத்தவரையில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனையும் இருந்து கொண்டிருக்கின்றது.
இருப்பினும் தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் தற்போதைய ஜனாதிபதியின் கருத்துகளும் செயற்பாடுகளும் வரவேற்கத்தக்கதாக இருக்கின்றது. அண்மையில் ஒரு வருட காலத்திற்குள் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் தீர்வைக் காண்பேன் என அவர் சொல்லியிருக்கின்றார். அவர் அதே இதய சுத்தியோடு எமது மக்களின் நீண்டகால பிரச்சனைக்குத் தீர்வைக் காண முன்வருவாராக இருந்தால் நிச்சயம் அவர் ஒது சிறந்த தலைவராகத் திகழ்வார். அத்துடன் அண்மையில் இடம்பெற்ற அரசியற் கைதிகளின் விடுதலையும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே போன்று எமது வடக்கு கிழக்கு மாகாணங்களில் எமது தமிழ் மக்களின் இருப்பு தொடர்பான விடயத்திலும் அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்து கேள்விக்குறியாக்கப்படுகின்ற தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாக்க முன்வரவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அவரது கைகளிலேயே இருக்கின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் விடயங்களை முன்னெடுத்தாலும் சில முஸ்லீம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் இரு இனங்களின் ஒற்றுமையையும் பாதுகாப்பதாக இல்லை. குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்கள் மிக நீண்ட காலமாக இரு இனங்களையும் பிரிக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
இந்த நாட்டில் தமிழ் பேசும் இனங்களாக இருக்கின்ற தமிழர்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றோம். நாங்கள் கையாளுகின்ற ஒவ்வொரு விடயங்களும் ஏனைய பாதிக்காத வகையிலேயே அமைகின்றன. ஆனால் அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொள்கின்ற விடயங்கள் மத இன அடிப்படையில் கையாளப்பட்டு இன்று கல்முனையிலே தமழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமை என்பது ஒரு கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கி ன்றது. இந்த விடயத்திலே குறிப்பாக இரண்டு சமூகங்களும் விழித்தெழ வேண்டும்.
இவ்வாறான அரசியல்வாதிகள் தமிழ் முஸ்லீம் மக்களைப் பரித்தாளுகின்ற தந்திரோபாயங்களைக் கையாண்டு தமிழர்களுக்குக் கிடைக்க வேண்யடி அதிகாரத்தையும், அரசியல் அபிலாசைகளையும் இல்லாமல் செய்கின்ற செயற்பாடுகளை முற்றுமுழுதாகக் கையிலெடுத்துச் செயற்படுகின்றார்கள். அண்மையல் இவர் வெளியிட்ட கருத்து தமிழ் மக்கள் மத்தியிலே பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரட்டைவேடம் போடுவதாகக் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் இரட்டைவேடம் போடுகின்ற அரசியல்வாதிகளாக இருந்து செயற்பட்ட வரலாறு கிடையாது.
நாங்கள் தமிழர்களின் விடுதலைக்காகச் செயற்படுகின்ற கட்சி என்ற ரீதியில் எங்களிடம் இரட்டிப்பான கொள்கை எதுவுமே இல்லை. நாங்கள் எந்த அரசாங்கம் வந்தாலும் அநீதியை எடுத்துரைத்து நியாயத்தைப் பேசுகின்ற ஒரு கட்சியாகவே அன்றிலிருந்து இன்றுவரை செயற்பட்டு வருகின்றோம். ஆனால் ஹரிஸ் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சிக்கு வருகின்ற சிங்களப் பேரினவாத அரசுகளோடு பேரம்பேசி தமிழர்களைக் கூறுபோடுகின்ற அழிக்கின்ற வேலையைத் தான் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள்.
இன்று கல்முனையில் கட்டம் கட்டிமான எல்லைப் பிரிப்புகளுக்கெல்லாம் அவர்கள் தீவிரமாகச் செயற்படுகின்றார்கள். ஏனைய பிரதேசங்களிலே எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் கல்முனையில் மாத்திரம் மிக மோசமான செயல்முறைகளை அவர் கையாண்டு கொண்டிருக்கின்றார். எனவே இரட்டை வேடம் போடுகின்றமை என்கின்ற விடயம் உண்மையிலேயே அவருக்குத் தான் மிகவும் பொருந்தும் ஏனெனில் அவரின் அரசியல் மேடைப் பேச்சுகளிலே வீரவசனங்களைப் பேசிவிட்டு சந்தர்ப்பம் வருகின்ற போது கைகளை உயர்த்தி கால்களிலே விழுந்து அடிபணிகின்ற ஒரு விடயத்தைத்தான் அவர் எப்போதும் கையாளுகின்றார்.
இந்த நாட்டின் சட்டமூலத்திலே இந்த 22ம் திருத்திற்குத் தான் அவர்கள் ஒற்றுமையாக இருந்து வாக்களித்தார்கள். அதற்கு முன்பு நடந்த ஒவ்வொரு வாக்கெடுப்புகளிலும் தலைமை ஒரு கருத்தைச் சொல்லும், அவர்கள் ஒரு விதமாகச் செயற்பட்டு அரசாங்கங்களைக் காப்பாற்றும் விதமாகச் செயற்பட்டிருந்தார்கள். அவ்வாறு அவர்கள் காப்பாற்றிய ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் சிறுபான்மையினங்களை அழிக்கின்ற செயற்கபாடுகளுக்கு சோரம் போனதாகவே கருதப்படும் என்பதை ஒவ்வொரு தமிழ்பேசும் மகனும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் சம்மந்தமாக அவரால் மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு நடவடிக்கையும் அந்தப் பிரதேச செயலகத்தின் எதிர்காலத்தை இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டங்களே. அது எதிர்காலத்தில் இந்த இரண்டு சமூகங்களையும் குழப்புகின்ற செயற்பாடாகவே அமையும். எனவே அதனை அவர்கள் கைவிட வேண்டும். இந்த விடயத்திலே மத ரீதியான அடிப்படைவாத அமைப்புகளும் செயற்படுகின்றன அவைகளும் அதனைக் கைவிட வேண்டும்.
ஒரு பிரதேச செயலக அதிகாரம் என்பது அந்த மக்களின் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கின்ற இடமாகவே செயற்படுகின்றது. அதனை இல்லாமல் செய்கின்ற விடயம் அநாகரிகமானது. கடந்த காலங்களில் தமிழர்கள் பல பகுதிகளில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு, அவர்களின் மதத்தலங்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளும் இருக்கின்றன. இவையெல்லாம் புரிந்துகொண்ட தமிழ் மக்கள் விட்டுக் கொடுப்பதற்கோ இவர்களை கண்டு ஏமாறுவதற்கோ தயாரில்லை. எனவே இவர்கள் தங்கள் மனக்கிலேசத்தை விடுத்து செயற்படுவார்களாயின் எதிர்காலத்தில் இந்தக் கல்முனைப பிராந்தியத்தில் மட்டுமல்லாது இந்த மாவட்டம் மாகாணத்தில் நல்லதொரு நிலைமையை ஏற்படுத்த முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியில் செய்படுகின்ற கட்சி என்ற ரீதியில் பல விட்டுக் கொடுப்புகளோடு முஸ்லீம் அரசியல்வாதிகளோடு பல பணிகளை முன்னெடுத்திருந்தது. எமது மக்கள் அந்த விடயத்திலே பல அதிருப்திகரமான கருத்துக்களை முன்வைத்திருந்தாலும், அதனையும் தாண்டி இந்த நாட்டிலே சிறுபான்மையாக வாழுகின்ற இனங்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்பட்டு வருகின்றோம். அந்த ஒற்றுமையை சீர்குலைக்க இவ்வாறான அரசியல்வாதிகள் முன்வரக் கூடாது.
இன்று கிழக்கு மாகாணத்திலே நாங்கள் மிக மோசமான அழிவுகளைச் சந்தித்து வருகின்றோம். நில அபகரிப்புகள், இன ரீதியான வீழ்ச்சி உட்பட பொருளாதார வீழ்ச்சி என்ற அடிப்படையில் 30 வருட கால யுத்தத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இனமாக இருந்தாலும் அதற்குரிய மீள்கட்டுமானப் பணிகள் இன்னும் ஒழுங்காக நடைபெறவில்லை. இன்றும் அரசியல் ரீதியாக கையாளுகின்ற விடயமே இந்த நாட்டிலே இருந்து கொண்டிருக்கின்றது. இந்த இன ரீதியான அரசியற் கலாச்சாரத்தை இந்த நாட்டு அரசியல்வாதிகள் மறந்து உண்மையாகப் பாதிப்பற்ற மக்களும் உதவி செய்ய முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.