இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒரு தொகை தென்னங்கன்றுகள் இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வாவின் நெல்லியடி அலுவலகத்தில் வைத்து இலவசமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
நூற்று கணக்கான பயனாளிகள் நேரில் வந்து தென்னங்கன்றுகளை பெற்று கொண்டனர். ஒவ்வொருவருக்கும் தலா 05 தென்னங்கன்றுகள் கொடுக்கப்பட்டன. வருகின்ற தினங்களிலும் தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்படும்.
கடந்த 30 வருட கால யுத்தத்தில் பல இலட்சம் தென்னை மரங்கள் போரில் ஈடுபட்ட தரப்பினர்களால் அழிக்கப்பட்டன. இந்நிலையில் ஒரு இலட்சம் தென்னங்கன்றுகளை யாழ். மாவட்டம் முழுவதிலும் நடுகின்ற வேலை திட்டத்தை இராணுவத்தின் யாழ். மாவட்ட தலைமையகம் முன்னெடுத்து வருகின்றது.
இவ்வேலை திட்டத்தை மக்கள் மத்தியில் சரியான முறையில் கொண்டு செல்ல ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதுடன் இவற்றை வளர்த்து பராமரித்து கொடுக்கவும் ஊழியர்கள் ஒழுங்கு பண்ணப்பட்டு உள்ளனர்.
இத்தென்னைகள் 04 வருட காலத்தில் காய்க்க தொடங்கும் என்று சொல்லப்படுகின்றது. இவ்வேலை திட்டத்தில் பயனாளிகளாக இணைய விரும்புவோர் மேலதிக விபரங்களுக்கு 0702095920 என்கிற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.