கரங்கா வட்டை விவகாரம் : எம்.பிக்களின் பங்குபற்றலுடன் நடந்த உயர்மட்ட கலந்துரையாடலில் தீர்வு கிட்டியது !

அம்பாறை சம்மாந்துறை கரங்கா வட்டை விவகாரம் சம்பந்தமாக அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் அம்பாறை அரசாங்க அதிபர் பண்டாரநாயக்கா தலைமையில் விவசாயிகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் நோக்கில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
கரங்கா வட்டையில் விவசாயிகள் விவசாயம் செய்வதில் தடையாக இருந்து ஒரு குழுவினர் அத்துமீறி செயற்பட்டதை  தடுத்து நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காஸிம், சட்டத்தரணி முஷாரப் முதுனபின், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌஸாத், அம்பாறை அரசாங்க அதிபர், அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சம்மாந்துறை மற்றும் அம்பாறை பிரதேச செயலாளர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
இங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் சம்மாந்துறை – அம்பாறை கரங்கா வட்டையில் விவசாயிகள் எவ்வித தடைகளுமின்றி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதற்கான சகல ஏற்பாடுகளையும் தான் செய்ய தயாராக உள்ளதாக அரசாங்க அதிபர் உறுதியளித்ததாகவும் மேலும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இவ்விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க உள்ளதாகவும் யாரையும் அத்துமீறி இந்த பிரதேசங்களில் செயட்பட அனுமதிக்கப்போவதில்லை என்று உறுதியளித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
 
இக்கலந்துரையாடல் இடம்பெற சிலமணித்தியாலங்களுக்கு முன்னர் அத்துமீறியவர்களுடன் அம்பாறை அரசாங்க அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் தொடர்ந்தும் அத்துமீறும் செயற்பாடுகளை செய்தால் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் போது அவர்கள் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளில் தாங்கள் ஈடுபடமாட்டோம் என்று அரசாங்க அதிபரிடம் உறுதியளித்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களிடம் தெரிவித்தார் .
 
எங்களின் வேண்டுகோளை ஏற்று இந்த பிரச்சினைக்கு தீர்வைக்கான இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்த அம்பாறை அரசாங்க அதிபருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் இந்த விடயத்தில் கரிசனையுடன் செயற்பட்ட அமைச்சர் சரத் வீரசேகர, இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, அம்பாறை அரசாங்க அதிபர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் உட்பட கரிசனையுடன் செயற்பட்டவர்களுக்கு விவசாயிகளின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

Related posts