இறைவரி திணைக்கள மாவட்ட காரியாலயத்தை அம்பாறையில் திறக்க கோரி மீஸான் ஸ்ரீலங்கா ஆளுநருக்கு கடிதம் !

இறைவரி திணைக்கள மாவட்ட காரியாலயத்தை அம்பாறையில் திறப்பது தொடர்பில் வலியுறுத்தி அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திற்கு கோரிக்கை மகஜர் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. அந்த மகஜரில் கிழக்கு மாகாண இறைவரித்திணைக்கள அலுவலகம் திருகோணமலையிலும், மாவட்டக் காரியாலயம் மட்டக்களப்பிலும் அமைந்துள்ளது. அம்பாறை மாவட்ட வரியிருப்பாளர்கள் தமது வரியை செலுத்த அல்லது வரி தொடர்பிலான விடயங்களை கையாள திருகோணமலை அல்லது மட்டக்களப்பு காரியாலயத்தை நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை உள்ளது. மிக அதிக தூரம், பிராயணச்செலவுகள், நேர விரயம் என பல்வேறு அசௌகரியங்களை இதனால் வரியிருப்பாளர்கள் அனுபவித்து வருகின்றனர்.
 
அம்பாறை மாவட்டக் காரியாலயம் ஒன்றின் அவசியம் அவசரமாக உணரப்படுவதனால் மாகாண இறைவரித் திணைக்கள மாவட்ட அலுவலகம் ஒன்றினை அம்பாறை மாவட்டத்தில் அவசரமாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதுடன் குறித்த காரியாலயத்தை அவசரமாக நிறுவ பொருத்தமான இடமாக கல்முனையில் வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள அறைகளை பயன்படுத்த முடியும். (ஆயிரம் கால் கட்டிடத்தொகுதி) அல்லது அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள், உள்ளுராட்சி மன்றங்களுக்குரிய கட்டிடங்கள் என பல கட்டிடங்கள் அம்பாறையில் பாவனையில் இல்லாத கட்டிடங்கள் உள்ளன. அவற்றை இந்த தேவைக்கு பயன்படுத்த முடியும் என அந்த மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளனர். அம்பாறை மாவட்ட அலுவலகம் இல்லாமை காரணமாக அம்பாறை அலுவலகத்திற்கென நியமிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு காரியாலயத்தில் இப்போது தற்காலியமாக பணியாற்றி வருகின்றனர்.
 
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கை வெல்லவும், நாட்டின் முதற்தர வருமானமாக உள்ள வரியை சிறப்பாக கையாளவும் இந்த அலுவலகத்தை துரித கெதியில் திறக்க ஆளுநரை ஆவணம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க ஆலோசனைகளையும், அனுமதியையும், திட்டங்களையும் முன்வைக்குமாறு கோரி மகஜரின் பிரதிகளை ஜனாதிபதி மற்றும் அவரது செயலாளர், பிரதம மந்திரி மற்றும் அவரது செயலாளர், நிதியமைச்சர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர், மாகாண சபைகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சு, கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிதி) ஆகியோருக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.

Related posts