தந்தை செல்வா என்ற உன்னத தலைவர் இல்லாமல் இருந்திருந்தால் இலங்கை தமிழரசு கட்சி தோற்றம் பெற்றிருக்காது வடக்கு கிழக்கில் தமிழ்தேசியம் என்ற இலட்சியம் இல்லாமல் தமிழர்கள் முகவரி
அற்ற மரக்கட்டைகளாக வாழ்ந்திருப்பார்கள் வடக்கு கிழக்கு தாயக கோட்பாடும் துண்டாடப்பட்டிருக்கும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சி எழுவது ஆண்டில் எதனை செய்துள்ளது என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அவர் மேலும் தெரிவிக்கையில்.
இலங்கை தமிழரசுகட்சியை உருவாக்கிய தந்தை செல்வா அவர்கள் நினைத்திருந்தால் கிழக்கு மாகாணத்தை கணக்கில் எடுக்காமல் வடமாகாணத்தை மட்டும் உள்ளடக்கி அரசியல் பணியை மேற்கொண்டிருக்கலாம் தந்தை செல்வாவின் இலட்சியம் கனவு எல்லாமே வடக்கும் கிழக்கும் இணைந்த சுயநிர்ணய உரிமையை பெறக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு மட்டுமே வடகிழக்கு மக்களின் சுதந்திர வாழ்வுக்கு சாத்தியமானது என்பதை 1949,ல் அவர் அடையாளம் கண்டிருந்தார் அதனால்தான் தமிழ்தேசிய சிந்தனையை கிழக்கு மகாணத்தில் வேரூன்ற வேண்டும் என்பதற்காக மட்டக்களப்பிற்கு வருகைதந்து செல்லையா இராசதுரை , சீ.மூ.இராசமாணிக்கம் ஆகியோரை இலங்கை தமிழரசு கட்சிக்குள் உள்வாங்கி வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் விடிவை நோக்கிய அகிம்சை ரீதியான போராட்ட அரசியல் ஊடாக மக்களை அணிதிரட்டி வடக்குகிழக்கு தாயகம் என்ற உணர்வுகளை விதைத்தார் அவர் அன்று 1949ல் விதைத்த விதை வேரூன்றி மரமாய் கிளைவிட்டு இன்று 70, வருடம் கடந்தும் அறுவடைக்காய் ஏங்கிக்கொண்டிருக்கிறோம்,
அந்த விடுதலை அறுவடைக்காய் பல்வேறு போராட்டங்களை ஒப்பந்தங்களை தந்தை செல்வா 1976, ம் ஆண்டு வரையும் இலங்கை அரசாங்கத்தலைவர்களுடன் மேற்கொண்ட வரலாறு அதை இலங்கை அரசு சிங்கள தலைவர்கள் ஏமாற்றிய வரலாறுகள் அனைத்தும் இலங்கை தமிழரசு கட்சி என்ற தாய் கட்சியின் செயல்பாடுகளுக்கு மட்டுமே உண்டு. இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்த சிங்கள பேரினவாத தலைவர்கள் ஏமாற்றி இலங்கை தமிழரசு கட்சிக்கும் அதன் தலைவர் தந்தைசெல்வா உட்பட அன்றிருந்த இலங்கை தமிழரசு கட்சி தொண்டர்களுக்கும் குண்டாம் தடி பிரயோகம்
சிறை அடைப்பு கல்வீச்சுக்கள் தடைகள் என பல வதைகளை தந்தனர்.
அதாவது 27,வருடம் 1976,வரை இலங்கை தமிழரசு கட்சியின் முழுநேர அரசியல்பணி ஏகபோக வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தலைமையை ஏற்று வழிநடத்திய ஒரு கட்சி இலங்கை தமிழரசுகட்சி மட்டுமே இருந்தது.வேறு எந்த கட்சியும் இவவாறான தமிழ்தேசி அரசியல் போராட்டங்களை செய்யவில்லை.
அதன்பின்பு தந்தை செல்வா 1976 மே 14,ம் திகதி வட்டுக்கோட்டை தீர்மானத்தின்போது இலங்கை தமிழரசுகட்சி, அகில இலங்கை தமிழ்காங்கிரஷ் மலையக மக்கள்முன்னணி ஆகிய மூன்று கட்சிகள் ஒன்றினைந்து தமிழர் விடுதலை கூட்டணி என்ற கட்சியாக பரிணமித்தது.
தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியலும் 1976 தொடக்கம் 1983,ம் ஆண்டுடன் ஏழு வருடங்களுடன் மௌனித்தது இருந்த போதும் தமிழர் விடுதலை கூட்டணி வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம் மௌனிக்கவில்லை அந்த தீர்மானம் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது 36,விடுதலை இயக்கங்கள் விடுதலை என்ற பெயரில் ஆயுதப்போராட்ட கரந்தடி தாக்குதல் பொராட்டத்தை மட்டும் மேற்கொள்ள வைத்தது.
அந்த 36 விடுதலை இயக்கங்களும் சரியாக நான்கு வருடங்களால் அதில் 35, ஆயுத தமிழ் இயக்கங்கள் மௌனித்தன ஓரிரு இயக்கங்கள் இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பின்பு ஆயுதங்களை எறிந்து விட்டு அரசியல் கட்சிகளாக அரசியல் நீரோட்டத்தில் இணைந்தனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டும் தொடர்ந்து தரை,வான், கடல்,என மரபுவழி போராட்டத்தை நடத்தியது அவர்கள் வடக்கு கிழக்கில் 70, வீத நிலப்பரப்பை தன்னகத்தே வைத்து நடைமுறை அரசை நிர்வகித்த காலத்தில் தான் 2001,ம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியுடன் இருந்த தமிழர் விடுதலை கூட்டணி,அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், மற்றும் ஆயுதம் ஏந்தி போராடி அரசியல் கட்சிகளாக இருந்த ரெலோ,ஈ.பீ.ஆர்.எல்வ் ஆகிய நான்குகட்சிகளை உள்ளடக்கிய தேர்தல் கூட்டாக தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாகியது.
2002 தொடக்கம் 2008, மே,18,வரை பகுதிநேர அரசியலாக ஜனநாயரீதியாக செயலாற்றிய தமிழ்தேசிய கூட்டமைப்பு முள்ளிவாய்க்கால் மௌனத்திற்கு பின்பே முழுநேர அரசியல் பணியை வடக்கு கிழக்கின் ஏக பிரதிநித்துவத்தை பெற்ற கட்சியாக இன்றுவரை தேசியரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் அரசியல் செயல்பாடுகளை செய்துகொண்டிருக்கிறது. சிலர் வரலாறுகள் தெரியாமல் அல்லது வரலாறுகளை மறந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு 70,வருடங்கள் தமிழர்களுக்கு என்ன செய்தது என விரல் நீட்டுகிறார்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு கடந்த 2009, மே,18, ம் திகதி தொடக்கம் 2019, வரை பத்து வருடம் மட்டுமே முழுமையான செயல்பாட்டு அரசியல் செய்கிறது இந்த பத்து வருடம் நாம் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் மட்டுமே எமக்கு விரல் நீட்டலாம்.
இலங்கை தமிழரசுகட்சி 1949, ல் ஆரம்பிக்கப்படாமல் இருப்பின் தந்தை செல்வா என்ற ஒரு மனிதர் எம்மண்ணில் பிறக்காமல் இருந்திருந்தால் இன்று தமிழ்தேசியம் தமிழர் சுயநிர்ணயம் சமஷ்டி இலட்சியம் விடுதலை சுதந்திரம் என்ற கொள்கைகள் தமிழர்களுக்கு இல்லாமல் போயிருக்கும் அதற்கான தேவை இன்றி தமிழ்தேசிய முகவரி அற்ற மரக்கட்டைகளாக வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்திருப்பார்கள்.
எனவே வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு தமிழ்தேசிய முகவரி கொடுத்த கட்சி இலங்கை தமிழரசுகட்சிதான் இதுதான் எழுபது வருட அரசியல் முன்னேற்றம் எனவும் மேலும் கூறினார்.